Tuesday 29 November 2011

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி மக்களின் பணம் வீண் விரையம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன
. இதை  அடுத்து பாராளுமன்றத்தின் இரு சபைகளும் நேற்று நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டன. பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 22-ம் தேதி துவங்கியது.  துவங்கிய நாள் முதற்கொண்டே பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால்   தொடர்ந்து நான்கு  நாட்களாக பாராளுமன்றத்தில் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. நேற்று 5-வது நாளாக பாராளுமன்றத்தின் இரு சபைகளும் கூடின. லோக் சபை நேற்று காலை 11 மணிக்கு கூடியதுமே சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுகளுக்கு அரசு அனுமதி வழங்கியிருப்பதற்கு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து  சில்லறை வணிகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு  அனுமதி அளிப்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். அவர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று அரசின் இந்த முடிவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று குரல் எழுப்பினர். இதேபோல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களும் இந்த பிரச்சனை குறித்து அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி சபையின் மையப் பகுதியை நோக்கி விரைந்தனர். அப்போது விலைவாசி  உயர்வு உள்ளிட்ட வேறு பல பிரச்சனைகளை எழுப்பியபடி இடதுசாரி கட்சி எம்.பி.க்களும் சபையின் மையப் பகுதிக்கு சென்று கோஷங்களை எழுப்பினர். கேரளாவைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை குறித்து தங்களது கோரிக்கையை எழுப்பி கூச்சல் போட்டனர்.  சில்லறை வணிகத்தில்  அன்னிய முதலீடு தொடர்பாக சபையில் விவாதம் நடத்த சபையை ஒத்திவைக்க வேண்டும் என்று  எதிர்க்கட்சி எம்.பி.க்கள்  கோரிக்கை விடுத்தனர். அ.தி.மு.க. பாராளுமன்ற  குழு  தலைவர்  மு.தம்பிதுரையும்  இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க சபையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.  ஆனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க சபாநாயகர்  மீராகுமார் மறுத்து விட்டார்.
கேள்வி நேரத்தை நடத்த விடாமல்  எதிர்க்கட்சி எம்.பி.க்கள்  கூச்சல் குழப்பம்  செய்து கொண்டிருந்தனர்.
அவர்களை சமாதானப்படுத்த மீராகுமார் மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை.
இதை அடுத்து சபை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு சபை மீண்டும்  கூடிய போதும் இதே பிரச்சினையை முன்வைத்து பா.ஜ.க., அ.தி.மு.க.உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பவே  சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதை அடுத்து சபையை நேற்று நாள் முழுவதுமாக சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார்.
இதேபோல ராஜ்ய சபையிலும் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு  அனுமதி அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக பா.ஜ.க.  உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர். இது தொடர்பாக விவாதிக்க கேள்வி நேரத்தை ரத்து செய்ய  வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு  சபை தலைவர் ஹமீது அன்சாரி அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இதனால் சபையை நண்பகல் 12 மணி வரை சபை தலைவர் அன்சாரி ஒத்திவைத்தார். பிறகு மீண்டும் 12 மணிக்கு சபை கூடியபோதும் இதே பிரச்சினையை முன்வைத்து  எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
சபை தலைவரின் சமாதான முயற்சிகளை அவர்கள் ஏற்கவில்லை.  உறுப்பினர்கள் அவரவர் இடத்திற்கு  சென்று அமர  வேண்டும் என்ற சபை தலைவரின்  வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தது.  தொடர்ந்து சபையை நடத்த முடியாத நிலை ஏற்படவே சபையை நேற்று நாள் முழுவதுமாக சபைத் தலைவர் ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார். மொத்தத்தில் நேற்று பாராளுமன்றத்தின் இரு சபைகளுமே எந்த விதமான அலுவல்களையும் மேற்கொள்ளாமல் ஸ்தம்பித்து நின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

0 comments: