Saturday 8 October 2011

இடைக்கால அரசுக்கு எதிராக வீதி இறங்குமாறு கடாபி அழைப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
லிபியாவின் அதிகார பூர்வமற்ற அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு
நாட்டு மக்களிடம் முன்னாள் தலைவர் முகம்மர் கடாபி அழைப்பு விடுத்துள்ளார்.
முஅம்மன் கடாபியின் பிறந்தகமான சிர்த் நகரம் கிளர்ச்சியாளர்கள் வசம் வீழும் தறுவாயிலுள்ள நிலையில் அவர் நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். லிபிய தலைநகர் திரிபோலியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து முஅம்மர் கடாபி தலைமறைவாகியுள்ளார். எனினும் அவர் தொடர்ச்சியாக ஒலிநாடா உரைகளை வெளியிட்டு வருகிறார்.
சிரியாவில் இருந்து செயற்படும் ‘அல் ராய், தொலைக்காட்சி கடாபியின் தகவல்களை வெளியிட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை கடாபி வெளியிட்ட புதிய தகவலில் இடைக்கால அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தெளிவற்ற ஒலி நாடா மூலம் வெளியான இந்த உரையில் கடாபி கூறியிருப்பதாவது :-
‘இடைக்கால அரசுக்கு எதிராக நாட்டின் ஒவ்வொரு நகர், ஒவ்வொரு கிராமம் ஊடாகவும் மக்கள் கிளர்ந்தெழுங்கள். பயமில்லாமல் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துங்கள். பச்சைக் கொடியை வானில் அசைத்தவண்ணம் கிளர்ந்தெழுங்கள்.
இடைக்கால அரசு லிபியாவின் அதிகாரபூர்வமான அரசல்ல. அது லிபியா மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசல்ல’ என்று கடாபி குறிப்பிட்டார்.
இதேவேளை, சிர்த் நகர் மீது இடைக்கால அரசு நேற்றைய தினத்திலும் கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்தது. நகரின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் நூற்றுக் கணக்கான வாகனங்களில் நகரின் மையப்பகுதியை நோக்கி முன்னேறி வருவதாக அங்கிருக்கும் பி. பி. சி. செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சிர்த் நகரில் இருந்து பெரும்பாலான சிவிலியன்கள் வெளியேறியுள்ள நிலையில் கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றம் தீவிரமடைந்துள்ளது. பீரங்கி மற்றும் மோட்டார் தாக்குதல்கள் நகரெங்கும் கேட்பதாகவும், சிர்த் நகரம் புகை மண்டலமாக காணப்படுவதாகவும் பி. பி. சி. செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் கிளர்ச்சியாளர்கள் மேற்காக மிஸ்ரட்டா நகரில் இருந்தும் கிழக்காக பெங்காசியிலிருந்தும் சிர்த் நகர் மீதான தமது படைபலத்தை அதிகரித்து வருகின்றனர். இதில் பெங்காசியில் இருந்து முன்னேறும் கிளர்ச்சியாளர்கள் சிர்த் நகரின் மையப் பகுதியை எட்ட இன்னும் ஒரு கிலோ மீற்றர் தூரமே உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சிர்த் நகர் வீழ்ந்த பின்னரே லிபிய இடைக்கால அரசின் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கமுடியும் என தேசிய மாற்ற கவுன்சிலின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

0 comments: