Sunday 18 September 2011

குண்டு வெடிப்புகளால் அரசுக்கு அவப்பெயர்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சமீபத்தில் டில்லி, மும்பையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை
அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். காவல்துறை உயரதிகாரிகளின் மாநாடு தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது இதில் ப. சிதம்பரம் பேசியது.
உள்நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையே இப்போதைய குண்டுவெடிப்பு சம்பவங்கள் காட்டுகின்றன. அவர்கள் வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் அளவுக்கு உள்ளனர். இளைஞர்கள் பலரை தங்கள் வசப்படுத்தி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.
சில குண்டுவெடிப்புகளை இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள்தான் நிகழ்த்தியுள்ளனர். இவர்கள் முன்பு இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி) என்ற பெயரில் செயல்பட்டு வந்தனர். சில வலதுசாரி மத அடிப்படைவாதிகளும், பிரிவினைவாதிகளும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
ஜுலை 13ல் மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பும், செப்டம்பர் 7ல் டில்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பும் நமது அரசுக்கு அவப்பெயரையும், களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவங்களுக்காக மத்திய அரசும், பாதுகாப்புப் படையும் கடுமையாக குற்றம்சாட்டப்பட்டன. இதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் நாட்டில் பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதுதான் நமது கடமை. பயங்கரவாத மையம் பாகிஸ்தான். பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும்தான் பயங்கரவாத மையமாக உள்ளன. இந்தியாவை தொடர்ந்து குறிவைத்துத் தாக்கும் லக்ஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், ஜெயஷி-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் இருந்துதான் செயல்படுகின்றன. பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவது சாதாரணமான விஷயம் அல்ல தீவிர கண்காணிப்பு உள்ளதால் எளிதில் ஊடுருவ முடியாது ஆனால் நேபாளம், பங்களாதேஷ் வழியாக இப்போது பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கின்றனர். இலங்கை வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவதும் பயங்கரவாதிகளுக்கு எளிதான வழியாக உள்ளது. தேசப் பாதுகாப்பு என்பதை நாட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து மேற்கொள்ள வேண்டியது. இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் நாட்டில் மத, ஜாதி ரீதியான மோதல்கள் இப்போது பெருமளவில் குறைந்துள்ளன என்றார் சிதம்பரம். நக்ஸல் வன்முறை குறையவில்லை. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட பிகார், ஒரிசா ஆகிய மாநிலங்கள் நக்ஸல்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில்தான் தங்கள் இடத்தை வலுப்படுத்திக் கொண்டுள்ள மாவோயிஸ்டுகள் அதனை தங்கள் மையமாக வைத்து செயல்படுகின்றனர்.
உள்நாட்டில் மிகப் பயங்கரமான அமைப்பு சிபிஐ மாவோயிஸ்டுகள்தான் இவர்கள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் குறையவில்லை என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் மேற்கு வங்கத்தில் ஆயுதங்களின் மூலம் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டுமென்ற நோக்கில் இவர்கள் கொரில்லா படையினரை உருவாக்கி வருகின்றனர். இவர்களை ஒடுக்க மாநில அரசுகளின் ஒத்துழைப்பு கண்டிப்பாகத் தேவை. காவல்துறை தலைவர்கள் இந்த விஷயத்தில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு இடதுசாரி பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும். போராட்டங்களில் ஈடுபடுவோரைக் கலைக்கும் போது உயிரிழப்பு ஏதும் ஏற்படாமல் பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இது தொடர்பாக காவல்துறைக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் சிதம்பரம்.