Monday 5 September 2011

நள்ளிரவில் பயங்கரம் : தந்தை, மகள் வெட்டி கொலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சாத்தூர்-: சாத்தூர் அருகே தந்தை, மகளை சரமாரியாக வெட்டி குடிசைக்குள் போட்டு தீ வைத்துக் கொன்ற மர்ம நபர்களை
 போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் குறுமலை அருகேயுள்ள பாறைப்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (60). நெல்லை மாவட்டம், கடம்பூரில் குடிநீர் வடிகால் வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள அமீர்பாளையத்தில் ராமச்சந்திரன் பன்றி, மாடுகள் வளர்த்து வந்தார். மகள் சின்னத்தாயும், மகன் வெள்ளைச்சாமியும் பாறைப்பட்டியிலேயே வசித்து வருகின்றனர்.

அமீர்பாளையத்தை சேர்ந்த மோகனுக்கு, மற்றொரு மகள் பெரியதாயை திருமணம் செய்து கொடுத்தனர். அதனால், ராமச்சந்திரனும் அவரது கடைசி மகள் ஜெயப்பிரதாவும் (25) அமீர்பாளையத்துக்கு குடியேறினர். இப்பகுதியில் பன்றி, மாடுகளை வைத்து வளர்த்து வந்தனர். இவற்றுக்கு தேவையான தீவனங்களை வைக்க குடிசை போட்டிருந்தார். தந்தை வேலைக்கு சென்று விடும் நாட்களில், தனது அக்கா வீட்டுக்கு ஜெயப்பிரதா சென்று விடுவார். வாரத்தில் ஒரு நாள் ராமச்சந்திரன் ஊருக்கு வருவார். அந்த நாளில் தந்தையும், மகளும் குடிசையிலேயே தங்கி கால்நடைகளை பராமரித்து வந்தனர்.

இந்நிலையில், ராமச்சந்திரன் நேற்று அமீர்பாளையம் வந்திருந்தார். இவரும், ஜெயப்பிரதாவும் இரவு குடிசையில் தங்கியிருந்தனர். இன்று காலை அவர்கள் படுத்திருந்த குடிசை எரிந்து சாம்பலாகி கிடந்தது. தந்தையும், மகளும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தனர். மேலும் உடலில் சரமாரியாக வெட்டுக் காயங்களும் இருந்தன. குடிசைக்கு வெளியில் ரத்தம் உறைந்த நிலையில் காணப்பட்டது. தகவல் அறிந்து சாத்தூர் டிஎஸ்பி சின்னையா, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக குடிசை இருந்ததால், சம்பவம் நடந்தது யாருக்கும் தெரியவில்லை. குடிசைக்கு வெளியில் ரத்தம் சிந்தியுள்ளதால் தந்தையும், மகளும் குடிசைக்கு வெளியே வெட்டிக் கொலை செய்யப்பட்டு பின்னர் உடல்களை குடிசைக்குள் போட்டு தீ வைத்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை நடந்த இடத்தை விருதுநகர் ஏடிஎஸ்பி சாமிநாதன் பார்வையிட்டார். மோப்ப நாய் ராணி வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றது. தடயவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். அமீர்பாளையம் வருவதற்கு முன் ராமச்சந்திரனும், ஜெயப்பிரதாவும் சாத்தூர் மேலகாந்தி நகரில் ஒரு வீட்டில் வசித்துள்ளனர். வீட்டு உரிமையாளருக்கும், இவருக்கும் தகராறு இருந்ததாகவும், அது தொடர்பாக ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த முன்விரோதத்தில் இக்கொலைகள் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். தந்தை, மகள் இரட்டைக் கொலை சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது