Tuesday 9 August 2011

சமச்சீர் கல்வி சுப்ரீம் கோர்ட் ஆணை பட்டாசு வெடித்து கொண்டாடம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
புதுடெல்லி: தமிழகத்தில் சமச்சீர் கல்வியை 10 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும். இதுதொடர்பான வழக்கில்
சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது. மாணவர்களுக்கு புத்தகங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் இன்று பரபரப்பு தீர்ப்பளித்தது. மேலும், தமிழக அரசு தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். தமிழகத்தில் 10ம் வகுப்பு வரை மாநிலக் கல்வித் திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓஎஸ்எல்சி ஆகிய பாடப்பிரிவுகள் இருந்தன. இதனால் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவின.
இதையடுத்து சமச்சீர் கல்வி முறையை செயல்படுத்த கடந்த 2006ல், முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமரன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது. இக்குழு எல்லா மாவட்டங்களிலும் பள்ளிக் கல்வி குறித்து ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. முத்துக்குமரன் குழு அளித்த கருத்துகள், பரிந்துரைகளை பரிசீலித்து சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் சாத்திய கூறுகளை தொகுத்து வழங்க, 2007ல் முன்னாள் மாநகராட்சி ஆணையர் எம்.பி.விஜயகுமார் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அதன் பிறகு மற்ற மாநிலங்களில் கல்வித் துறையில் பின்பற்றப்படும் பயனுள்ள நடைமுறைகளை தெரிந்துவர 2008ல் ஒரு கல்வியாளர் குழுவை அரசு அமைத்தது.
அந்த குழு மற்ற மாநிலங்களுக்கு சென்று விரிவான அறிக்கை சமர்ப்பித்தது. இதற்கு பிறகு 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வி குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள 4 விதமான பாடத் திட்டங்களை நீக்கிவிட்டு அனைவருக்கும் ஒரே மாதிரியான சிறந்த தரமுள்ள பாடத் திட்டத்தை கொண்டுவர திமுக அரசு முடிவு செய்தது. இதற்காக சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் மட்டும் சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 2011ம் ஆண்டில் மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த திமுக அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறையில் உள்ள 10 இணை இயக்குநர்கள் தலைமையில் சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் எழுதும் பணி தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் புத்தகம் அச்சிடும் பணி தொடங்கியது. இலவச பாடநூல் வழங்கும் திட்டத்துக்காக 4 கோடியே 49 லட்சம் புத்தகம் அச்சிட திட்டமிடப்பட்டது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கடந்த ஆண்டு 6 கோடியே 20 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இந்த ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு வருவதை அடுத்து 7.50 கோடி புத்தகம் அச்சிட்டுள்ளனர்.

ஒன்றாம் வகுப்புக்கான புத்தகங்கள் 4 தலைப்பிலும், 6ம் வகுப்புக்கான புத்தகங்கள் 5 தலைப்பிலும் அச்சிட்டு கடந்த ஆண்டு வழங்கப்பட்டன. சமச்சீர் கல்வி புத்தகங்கள் அனைத்தும் பல வண்ணத்தில் அச்சிட்டு வழங்கப்பட்டன. அவை மாணவர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 2011ம் கல்வி ஆண்டுக்காக 197 தலைப்புகளில் பாடப் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழ் வழியில் பாட நூல்கள் மொத்தம் 6 கோடியே 49 லட்சம் அச்சிடப்பட்டுள்ளன. ஆங்கில வழிப் புத்தகங்கள் 11 லட்சத்து 25 ஆயிரம் அச்சிடப்பட்டுள்ளன. சில்லரை விற்பனைக்கென தனியாகவும் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதற்காக ரூ.200 கோடி செலவிடப்பட்டது.
கடந்த மே 14ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மே மாத இறுதியில் மாணவர்களுக்கு புத்தகம் வினியோகம் செய்யப்பட இருந்தது. இந்நிலையில், ஆட்சிக்கு வந்துள்ள அதிமுக அரசு இந்த ஆண்டு சமச்சீர் கல்வி இல்லை என்று அறிவித்தது. மேலும், சமச்சீர் கல்வியை நிறுத்த சட்ட திருத்தம் கொண்டு வந்து, பழைய பாடத் திட்டத்தை அமல்படுத்த முயற்சித்தது. இதை எதிர்த்து 10 பேர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். ஏற்கனவே, கடந்த ஜூலை 18ம் தேதி உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில், ‘உடனடியாக பாடப் புத்தகங்கள் வழங்கும் பணியை தொடங்க வேண்டும். ஆக.22ம் தேதிக்குள் அந்த பணியை முடிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியது.
தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தையும் ரத்து செய்தது. இதை ஏற்காத அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றம் சொன்ன தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது. உயர் நீதிமன்றம் சொன்னபடி, பாட புத்தகங்களை உடனடியாக வழங்க வேண்டும்; ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும்Õ என்று உத்தரவிட்டனர். ஆனால், நீதிமன்றம் கூறிய தீர்ப்பின்படி நடந்து கொள்ளாத தமிழக அரசு இன்னும் புத்தகங்களை வழங்கவில்லை. உயர் நீதிமன்றம் சொன்னபடி ஜூலை 22ம் தேதிக்குள்ளும் கொடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் தெரிவித்தபடி ஆகஸ்ட் 2ம் தேதிக்குள்ளும் புத்தகம் வழங்கவில்லை. ஆனால், ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் கொடுத்து விடுவோம் என்று தமிழக அரசு தெரிவித்தது. அதன்படியும் புத்தகம் கொடுக்கவில்லை.
இதற்கிடையே பழைய பாடப் புத்தகங்களையும் அச்சிட்டு மாவட்டங்களில் இருப்பு வைக்கும் பணியை மட்டுமே பள்ளிக் கல்வித் துறை செய்து வந்தது.

அரசின் இதுபோன்ற செயல்களால் பெற்றோரும் மாணவர்களும் கடந்த இரண்டரை மாதங்களாக ஆத்திரத்தில் இருந்தனர். பள்ளிகளில் கடந்த 70 நாட்களாக எந்த பாடங்களும் நடக்காமல் மாணவர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடிந்து உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கை கடந்த ஜூலை 26ம் தேதியில் இருந்து 6 நாட்கள் விசாரணை நடத்தியது. கடந்த வியாழக்கிழமை இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. காலை 10.34 மணிக்கு நீதிபதிகள் தங்கள் இருக்கையில் அமர்ந்தனர். நீதிபதி பி.எஸ்.சவுகான் தீர்ப்பை வாசித்தார். சென்னை ஐகோர்ட் தீர்ப்பில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இந்த வழக்கில் 25 அம்சங்களை ஆராய்ந்து பார்த்து இந்த தீர்ப்பை அளித்துள்ளோம் என்றார். ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார். இந்த கல்வியாண்டே சமச்சீர் கல்வி திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் கடந்த இரண்டரை மாதங்களாக வெறுமனே பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்த 1.26 கோடி மாணவர்கள் குஷி அடைந்துள்ளனர்.
சமச்சீர் கல்வி உடனடி அமல் : சட்டசபையில் ஜெ. அறிவிப்பு!

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் எம்எல்ஏ டில்லி பாபு பேசும்போது, முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு பேசியதாவது: சமச்சீர் கல்வி குறித்தான தீர்ப்பு இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பை ஏற்று உடனடியாக சமச்சீர் கல்வியை தமிழகத்தில் அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
அதிமுக அரசுக்கு மிகப்பெரிய பாடம் : கருணாநிதி
சென்னை: சமச்சீர் கல்வி தீர்ப்பை அடுத்து கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை: ஒன்றேகால் கோடி மாணவ, மாணவியர்களும், அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூக நீதியில் அக்கறை கொண்டோரும் எதிர்பார்த்த சமச்சீர் கல்வி பற்றிய தீர்ப்பு வந்து விட்டது.உயர்நீதிமன்ற நீதியரசர்களும், உச்சநீதிமன்ற நீதியரசர்களும், திரும்பத் திரும்பச் சொல்லியும் அவைகளை எல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு திமுக ஆட்சி அறிமுகப்படுத்தியது என்ற காரணத்திற்காகவும், ஆதிக்க வர்க்கத்துக்கு ஆதரவாகவும், சமச்சீர் கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டேன் என்றும், நீதி மன்றங்களே நாட்களைக் குறிப்பிட்டு சொல்லி, அந்த தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களை வினியோகிக்க வேண்டுமென்று வலியுறுத்தியும் கூடக் கேளாமல், முரட்டுப் பிடிவாதம் காட்டி வந்த அதிமுக அரசுக்கு ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மிகப் பெரிய பாடம் உச்ச நீதிமன்றத்திலிருந்தே கிடைத்துள்ளது.
இதே தீர்ப்பு திமுக ஆட்சியிலே உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தால், உடனடியாக கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று அறிக்கை விடுத்திருப்பார் ஜெயலலிதா. அதைப் போல நான் தற்போது அறிக்கை விடுவதற்கு விரும்பவில்லை. இனியாவது இதுபோன்ற பிரச்னைகளில் ஜெயலலிதா தனது பிடிவாதப் போக்கினைக் கைவிட்டு, நாட்டு நலன்கருதி தன்னுடைய அணுகுமுறைகளையும், நடவடிக்கைகளையும் மாற்றிக் கொண்டு செயல்படுவார் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். சமச்சீர் கல்விக்கு கிடைத்த இந்த உச்சக்கட்ட வெற்றியை அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
சமச்சீர் கல்வி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று தெரிந்ததால், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆசிரியர்களும், மாணவர்களும் ஆர்வமாக தீர்ப்புக்காக காத்திருந்தனர். காலை 10.34 மணிக்கு, சமச்சீர் கல்விதான் என்று நீதிபதிகள் தீர்ப்பு கூறியதும் எல்லோரும் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள், பெற்றோர், ஆசிரியர் என எல்லா தரப்பினரும் மகிழ்ச்சியில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். பல இடங்களில் இனிப்புகளும் வினியோகித்தனர்.
56 ஆயிரம் பள்ளிகளில் ‘சமச்சீர்’
தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் பள்ளிகளில் மாநில பாடத் திட்ட முறை பின்பற்றப்படுகிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 11 ஆயிரம் உள்ளன. 50 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், 25 ஓரியன்டல் பள்ளிகள் உள்ளன. மாநிலம் முழுவதும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள 56 ஆயிரம் பள்ளிகள் அனைத்திலும் இனி சமச்சீர் கல்வி மட்டுமே பின்பற்றப்படும். அரசு பள்ளிகள், அரசு நிதியுதவியில் இயங்கும் பள்ளிகள், மெட்ரிக் உள்பட எல்லா மாணவர்களும் இனி ஒரே பாடத் திட்ட புத்தகங்களையே படிப்பார்கள். ஒன்றாகவே தேர்வு நடக்கும்

0 comments: