Thursday, 28 July 2011

கருணாநிதி - ஜெயலலிதா அரசியல் மோதலில் சிக்கித் தவிக்கிறது சமச்சீர் கல்வித் திட்டம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அ.தி.மு.க. அரசுக்கு சாதகமில்லாததால் இழுபறி நீடிக்கிறது

ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வித் திட்ட புத்தகங்கள் தரமானதாக இல்லை. சமச்சீர் கல்வித் தரத்தை தேசிய, சர்வதேச அளவில் தரம் வாய்ந்ததாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு கால அவகாசம் வேண்டும். எனவே, இந்த ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை அமுல்படுத்துவது சாத்தியமல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திமுக ஆட்சியில் அமுலாக்கப்பட்ட சமச்சீர் கல்வியை அதிமுக அரசு நிறுத்தி வைத்தது. மேலும் சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சமச்சீர் கல்வியை அ.தி.மு.க அரசு நிறுத்தி வைப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதற்கிடையே சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான சட்டத் திருத்தம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்தும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே அமுல் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதன் பின்னர் இதை எதிர்த்து புதுடில்லி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றமும், தமிழக அரசு கடந்த ஆண்டு 1 மற்றும் 6 வது வகுப்புகளுக்கு தொடங்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை இந்த ஆண்டும் தொடர வேண்டும். மற்ற வகுப்புகளுக்கு சமர்ச்சீர் கல்வி தொடர்வது குறித்து கல்வியாளர் குழு அமைத்து அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பின்படி நிபுணர்களின் அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அ.தி.மு.க அரசு நிறைவேற்றிய சமச்சீர் கல்வித் திருத்தச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், 1 முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமுலாக்க வேண்டும். ஜுலை 22ம் திகதிக்குள் சமச்சீர் கல்வி புத்தகங்களை அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் தமிழக அரசு கடந்த 19ம் திகதி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது.

ஆனால், அதை விசாரித்த டில்லி உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அடுத்த மாதம் 2ம் திகதிக்குள் சமச்சீர் கல்வியை அமுலாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்நிலையில் சமச்சீர் கல்வி கோரி பெற்றோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதும் சமச்சீர் கல்வியை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனு மீதும் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடந்தது.
நீதிபதிகள் பன்கல், தீபக் வர்மா, செளகான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போதே தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கோரப்பட்டதுடன், இத்திட்டத்தை அமுல்படுத்துவது இப்போதைக்கு சாத்தியமில்லை எனவும் கூறப்பட்டது.
இதற்கிடையே தமிழக மாணவரின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வக்கீல் “இரு மாதங்களாக மாணவர்கள் பாடநூல் இன்றியே பாடசாலைக்குச் செல்கின்றனர்” எனக் கூறினனர்.
“மாணவரின் கல்வி பாதிக்கப்படுகிறது” எனவும் வக்கீல்கள் ஆட்சேபித்தனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அது எப்போது அமுல்படுத்தப்படும் என்று தமிழக அரசின் வக்கீல் ராவ் என்பவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராவ், 2012ம் கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வியை அமுல்படுத்த முயற்சி செய்யப்படும் என்றார்.

0 comments: