Tuesday 26 July 2011

தொட்டில் குழந்தை திட்டம் மேலும் விரிவாக்கம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பெண் குழந்தைகள் விகிதம் குறைந்துள்ள கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களுக்கு தொட்டில் குழந்தை திட்டத்தை விரிவுபடுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.



இது தொடர்பாக, அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு. தமிழகத்தில் 2001 இல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 946 பெண் குழந்தைகள் என்று இருந்த பாலின விகிதம், 2011 இல் 946 ஆக உயர்ந்துள்ளது. தொட்டில் குழந்தைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பெண் குழந்தைகள் விகிதம் அதிகரித்துள்ளது.



அதன் விவரம் (2001-2011 கணக்கெடுப்பு, 1000 ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளின் விகிதம்): சேலம் 851 – 917, மதுரை 926 – 939, தேனி 891 – 937, திண்டுக்கல் 930 – 942, தருமபுரி 826 – 911. எனினும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதத்தில் பெண் குழந்தைகள் விகிதம் கவலையளிக்கும் வகையில் குறைந்துள்ளது.



இதற்கு பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பது, பெண் சிசுக் கொலை போன்றவை காரணங்களாகக் கருதப்படுகிறது. எனவே இந்த 5 மாவட்டங்களுக்கும் தொட்டில் குழந்தைத் திட்டத்தை விரிவுப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். அதன்படி, இந்த மாவட்டங்களில் தொட்டில் குழந்தை வரவேற்பு மையங்கள் ரூ. 47.45 லட்சம் செலவில் தொடங்கப்படும்.



இந்த மையங்களில் மேற்பார்வையாளர், துணை மருத்துவச் செவிலியர், உதவியாளர் போன்ற பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த, பொதுமக்களும், பெண் குழந்தை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கோரியுள்ளார் முதல்வர்.



தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலமாக இதுவரை 3,200 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளது. பெண் சிசுக் கொலையை முற்றிலும் ஒழித்திடவும், குழந்தைகளை இறப்பின் பிடியிலிருந்து காப்பாற்றவும் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தொட்டில் குழந்தைத் திட்டம் 1992 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.



2001 இல் நான் 2 வது முறையாக முதல்வராகப் பதவியேற்ற போது, பெண் சிசுக் கொலை நடைபெற்று வந்த மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் இதுவரை 3,200 க்கும் அதிகமான பெண் குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

0 comments: