Saturday 23 July 2011

போர் பயிற்சி பெற வந்த இலங்கை ராணுவத்தினர் வெளியேற்றம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
குன்னூரில் போர் பயிற்சி பெற வந்த இலங்கை ராணுவத்தினருக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியதால்
பயிற்சியை பாதியில் முடித்துக்கொண்டு இலங்கை ராணுவத்தினர் திரும்பினர்.

குன்னூர் வெலிங்டனில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ராணுவ பயிற்சி முகாமில் அவ்வப்போது பல்வேறு நாட்டினர் போர் பயிற்சிகள் பெறுவதற்காக வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தால் இலங்கை ராணுவத்தினர் இங்கு வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மைசூர் வழியாக இலங்கை ராணுவத்தினர் 21 பேர் ஆம்னி பேருந்தில் குன்னூர் வந்திறங்கினர். அவர்கள் ஒரு ஹொட்டலில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பின்னர் அவர்கள் அங்கிருந்து ராணுவ பயிற்சி மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். தகவல் அறிந்த பொது மக்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்ததோடு தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுத்தினருக்கு தமிழ்நாட்டிலேயே பயிற்சி அளிப்பதா எனக்கூறி ஆவேசம் அடைந்தனர்.

பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் நேற்று மாலை குன்னூரில் திரண்டனர். இலங்கை அதிபர் ராஜபஷேவை கண்டித்தும், பயிற்சி பெற வந்துள்ள இலங்கை ராணுத்தினரை வெளியேறக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்ற 181 பேரை பொலிசார் கைது செய்தனர்.

கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் கோவை காந்திபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து இன்று காலை இலங்கை ராணுவத்தினர் தங்கள் போர் பயிற்சிகளை பாதியில் முடித்துக் கொண்டு சத்தியமங்கலம், தாளவாடி வழியாக மைசூர் புறப்பட்டுச் சென்றனர். அங்கிருந்து இலங்கைக்கு செல்ல உள்ளனர்.

0 comments: