இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
வேலூர்: சென்னையிலிருந்து பொள்ளாச்சி சென்ற தனியார் பஸ் ஒன்று காவேரிபாக்கம் அருகே பாலத்தில் மோதி கவிழ்ந்ததில் தீ பிடித்தது. இச்சம்பவத்தில் அப்பேருந்தில் பயணம் செய்த 23 பயணிகள் உயிருடன் கருகி பரிதாபமாக பலியாகினர். சென்னையிலிருந்து நேற்று இரவு 8.45 மணியளவில் தனியார் பஸ் ஒன்று பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டது. இப்பேருந்தில் ஓட்டுனர் உட்பட 24 பயணிகள் இருந்தனர். இரவு 10.45 மணியளவில் காவேரி பாக்கம் அவலூர் என்ற இடத்தில் முன்னால் சென்ற லாரி ஓட்டுனர் திடீரென்று பிரேக் போட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் வலது பக்கமாக பேருந்தைத் திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் விழுந்து உருண்டது. இதனால் பஸ்ஸின் டீசல் டேங்க் வெடித்து சிதறி தீ வேகமாக பரவியது. இதனால் பயணிகள் அலறி தவித்தனர். யாராலும் வெளியேற முடியவில்லை. ஒருவர் மட்டும் பஸ் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே குதித்தார். மற்றவர்கள் அனைவரும் தீயில் கருகி மாண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மற்றவர்கள் அனைவரும் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகிவிட்டனர்.
விபத்து குறித்து வேலூரில் போலீசாரிடம் சரணடைந்த டிரைவர் நாகராஜன் கூறியதாவது:-
பஸ் சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று இரவு 9.15 மணிக்கு புறப்பட்டது. இரவு சுமார் 11 மணிக்கு வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே வந்தது. அப்போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றேன். அப்போது அந்த லாரி இடது பக்கத்தில் இருந்தது வலது பக்கம் திரும்பியது.
இதனால் பஸ் முன்னால் சென்ற லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் பஸ் எனது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பாலத்தில் மோதியது. அதைத் தொடர்ந்து பின்னால் வந்த லாரி பஸ் மீது மோதியதால் பஸ் திடீரென்று பாலத்தை உடைத்து கொண்டு பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
லாரி மோதிய வேகத்தில் பஸ்சின் டீசல் டேங்கரில் கசிவு ஏற்பட்டது. பஸ் கவிழ்ந்த வேகத்தில் பஸ்சின் கதவு அடிப்பாகத்தில் சிக்கி கொண்டது. நான் கண்ணாடியை உடைத்து கொண்டு தப்பினேன். மற்ற பயணிகள் மேலே வர கண்ணாடியை உடைக்க முயற்சி செய்தேன். அதற்குள் டீசல் முழுவதும் கசிந்து திடீரென்று தீப்பிடித்தது.
தீப்பிடித்த வேகத்தில் பஸ் முழுவதும் தீ மளமளவென்று எரிய தொடங்கியது. நான் அந்த வழியாக வந்தவர்களை உதவிக்கு அழைத்தேன். ஆனால் யாரும் வரவில்லை. இதனால் பஸ்சில் பயணம் செய்த 22 பேரும் தீயில் கருகி இறந்தனர்.
அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் என்னை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரணடைய கூறினார்கள். பின்னர் நான் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தேன.
இவ்வாறு அவர் கூறினார். வடக்கு போலீசார் டிரைவர் நாகராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment