Saturday 14 May 2011

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.மொத்தம் உள்ள 234
தொகுதிகளில் 203 தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 160 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 146 தொகுதிகளில் வென்று தனித்து ஆட்சி அமைக்கிறது.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் இன்று சென்னை வந்தனர். ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு அவர்கள் வந்ததால், அ.தி.மு.க. அலுவலகம் விழாக் கோலமாக காட்சி அளிக்கிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று (சனிக்கிழமை) பிற்பகல் அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்துக்கு வருகிறார்.
அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தலைமைக்கழகம் வரும் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க அ.தி. மு.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். தலைமை கழகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பிற்பகல் 2.30 மணி அளவில் நடைபெற உள்ளது. அப்போது புதிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஜெயலலிதா வாழ்த்துக்களை தெரிவிப்பார்.
அதன் பிறகு முதல்-அமைச்சராக ஜெயலலிதாவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏக மனதாக தேர்வு செய்வார்கள். இதைத் தொடர்ந்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க புறப்பட்டு செல்வார். முதலில் ஸ்பென்சர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். பிறகு மெரீனா கடற் கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களுக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
தொடர்ந்து அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும், ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதைத் தொடர்ந்து கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பர்னாலாவை ஜெயலலிதா சந்தித்துப் பேசுவார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தன்னை சட்டசபை தலைவராக தேர்வு செய்துள்ள விபரத்தை கூறுவார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அதை கவர்னர் பர்னாலா ஏற்றுக் கொள்வார். புதிய ஆட்சி அமைக்க வரும்படி ஜெயலலிதாவுக்கு அவர் அழைப்பு விடுப்பார். அதன் பிறகு அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்பதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கும்.
முதல்-அமைச்சராக நாளை (ஞாயிறு) ஜெயலலிதா பதவி ஏற்பார் என்று தெரிகிறது. அப்போது சில அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழா ஓரிரு நாட்களில் நடத்தப்படும் என்று தெரிகிறது. அ.தி.மு.க. அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள வரும்படி குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி உள்பட பல வி.வி.ஐ.பி.க்களுக்கு அ.தி. மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0 comments: