Saturday 12 March 2011

ஜப்பான் அணுமின் நிலையங்களில் அவசர நிலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
டோக்கியோ: சுனாமி தாக்குதலில் உருக்குலைந்த ஜப்பானில்  பூகம்பம் ஏற்பட்டது. இதனால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். சுனாமியில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, கதிர்வீச்சு தாக்குதல் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அணுமின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பசிபிக் கடலில் கடந்த புதன்கிழமை பூகம்பம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 7.4 புள்ளிகளாக பதிவானதால், ஜப்பானை சுனாமி தாக்கலாம் என பசிபிக் சுனாமி மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், செண்டாய் நகர் அருகேயுள்ள பசிபிக் கடல் பகுதியில் நேற்று காலை 11.16 மணிக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 புள்ளிகள் பதிவானது. கடற்கரை நகரங்களில் இருந்த கட்டிடங்கள் குலுங்கின.

சிறிது நேரத்தில் பசிபிக் கடலில் எழுந்த ராட்சத சுனாமி, டோக்கியோ உள்ளிட்ட ஜப்பானின் கடற்கரை நகரங்களை சூறையாடியது. கடல் பொங்கி ஊருக்குள் புகுந்ததால் பேரழிவு ஏற்பட்டது. ஆக்ரோஷ கடல் வெள்ளத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன. ஆயிரக்கணக்கான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஏராளமானோர் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். துறைமுக பகுதியில் இருந்த கப்பல்கள், படகுகள், கார்கள் எல்லாம் சுனாமி வெள்ளத்தில் சிதைந்தன.

பலியானவர்களின் உடல்கள் செண்டாய் பகுதியில் ஆங்காங்கே புதைந்து கிடக்கிறது. உடல்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இதுவரை 185 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை காணவில்லை. இதனால், சுனாமி பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. பூகம்பத்தால் ஜப்பானில் உள்ள 5 அணு மின்நிலையங்களில் பாதிப்பு எதுவும் இல்லை என முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது 2 அணு மின்நிலையங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. புகுசிமா டைசி என்ற அணு மின் நிலையத்தில் மின்சப்ளை துண்டிக்கப்பட்டதால், அங்குள்ள ஜெனரேட்டர் உதவியுடன் அணுஉலையின் குளிரூட்டும் சாதனங்கள் செயல்பட்டது. திடீரென ஜெனரேட்டர் பழுதடைந்ததால், 460 மெகாவாட் திறனுள்ள அணுஉலையின் குளிரூட்டும் சாதனங்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் அணு உலையில் வெப்பநிலை இயல்பானதைவிட பல மடங்கு அதிகரித்தது.

அணு உலையின் கண்காணிப்பு கருவியில் கதிர்வீச்சின் தாக்கம் இயல்பானதைவிட 8 மடங்கு அதிகமாக காட்டியது. இதனால் அணு உலையில் வெடிப்பு ஏற்பட்டு மிகப்பெரிய கதிர்வீச்சு தாக்குதல் அபாயம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவசர நிலை அறிவிக்கப்பட்டு அணுமின் நிலையத்தை சுற்றி 10 கி.மீ தொலைவில் வசிக்கும் சுமார் 50 ஆயிரம் பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

இதேபோல் ஒனகாமா நகரில் உள்ள 40 ஆண்டு கால பழமையான அணுமின் நிலையத்திலும் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜப்பானின் அணு தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி ரியோகே சியோமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சரவை செயலாளர் யுகியோ எடானோ, ‘‘பாதிப்பு ஏற்பட்டுள்ள அணுமின் நிலையங்களில் கதிர்வீச்சு தாக்கம் மிக குறைந்த அளவில் உள்ளது. இதனால் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது" என்றார்.

மீண்டும் பூகம்பம்

சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் ஜப்பான் அரசு முழுவீச்சில் இறங்கியுள்ளது. ராணுவத்தினரும் மருத்துவ குழுவினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அங்கு தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படுவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள மலைப் பகுதியில் இன்று காலையும் பூகம்பம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகள் பதிவாகியது. இந்த பூகம்பம் வடக்கு யோக்யோவில் இருந்து 170 கி.மீ. தொலைவில் கடலுக்குள் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. பூகம்பத்தால் டோக்கியோவில் பல கட்டிடங்கள் ஆடின. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஜப்பானின் மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதாக அமெரிக்க உறுதி அளித்துள்ளது.

பாகிஸ்தானிலும் நிலநடுக்கம்

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் பசிபிக் கடல் பகுதி அருகேயுள்ள சுமார் 50 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 புள்ளிகளாக பதிவாகியது. இந்துகுஷ் மலைப் பகுதியில் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. இதன் அதிர்வுகள் கைபர், பக்துன்கவா, பெஷாவர் போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டது.

0 comments: