Thursday, 10 March 2011

அ.தி.மு.க கூட்டணி உடையுமா? வைகோ தலைமையில் 3-வது அணி?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை: அ.தி.மு.க பொதுசெயலாளர் தங்களை 'ஊறுகாய்'க்கு ஒப்பாக
பயன்படுத்துவதாக ம.தி.மு.க மற்றும் இடதுசாரிகள் கடும் கோபத்தில் உள்ளனர். அ.தி.மு.க பொதுசெயலாளரான ஜெயலலிதா தங்களுக்குக் குறைவான தொகுதிகளையே தர முன்வந்துள்ளதாகவும், அதைவிட சந்தர்பாதம் பார்ப்பதுதான் அவர்களைக் கடும் கோபத்திற்குள்ளாக்குவதாகவும் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவித்தனர். தி.மு.க-வுக்கும் காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்த சர்ச்சை வெடித்த போது, அதைத் தகுந்த சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி ஜெயலலிதா காங்கிரசை கூட்டணியில் சேர்ப்பதற்காக தங்களுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையையே நிறுத்தி வைத்தது தங்களுக்கு ஏற்பட்ட கேவலமாக ம.தி.மு.க -வினரும் இடதுசாரிகளும் கருதுகின்றனர். ஜெயலலிதாவின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு தங்களை விட்டு விட்டு காங்கிரசோடு கூட்டணியமைக்க டில்லியில் தீவிர முயற்சியில் அ.தி.மு.க இறங்கியது. இருப்பினும் திமு.க-காங்கிரஸ் கூட்டணி இணைந்ததும் மீண்டும் தங்களுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்ததை தங்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்று ம.தி.மு.க-வினரும் இடதுசாரிகளும் கூறினர். எனவே  அ.தி.மு.க தனது தவறுகளுக்குப் பிராயசித்தமாக தங்களுக்குப் போதுமான தொகுதிகளையாவது வழங்க வேண்டும் என்று ம.தி.மு.க -வினரும் இடதுசாரிகளும் தங்களின் கருத்தை முன்வைத்தனர். இருப்பினும் தே.மு.தி.க வந்த பிறகு ஜெயலலிதா தங்களை ஊதாசீனப்படுத்தும் வகையில்  நடந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட அதே பத்திரிகையாளர்தான் இதற்குப் பின்புலமாக இருந்துள்ளார் எனவும், இவருக்கு வைகோவையும் இடதுசாரிகளையும் பிடிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை 35 தொகுதிகளில் போட்டியிட்ட வைகோ இம்முறை 36 தொகுதிகள் கேட்டு பின்னர் 30, 26 என்று இறங்கி வந்தார்.ஆனால் இதற்கு மாறாக அ.தி.மு.க மிகக் குறைந்த பட்சமாக 5 தொகுதிகள் என்று ஆரம்பித்து 6, 7, 8 என்று அதிகரித்து 10 தொகுதிகளோடு நிறுத்திக் கொண்டுள்ளது. வைகோ, 18 தொகுதிகள் தரப்படுமானால் உடன்பாடு செய்து கொள்ளலாம் என்ற அளவுக்கு இறங்கி வந்து விட்ட போதிலும் அவரை அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் அ.தி.மு.க இழுத்தடித்து வருகிறது என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக 5-ஆம் தேதி இரவு 10 மணிக்கு வைகோ தலைமையில் நடந்த ம.தி.மு.க அரசியல்  விவகாரக் குழு கூட்டத்தில் பல காரசாரமான விவாதங்கள் நடைப்பெற்றது. ஜெயலலிதா ஒரு நம்பிக்கை துரோகி என்று அக்கூட்டத்தில் விமர்சிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் கலங்கிய முகத்துடன் பேசிய வைகோ "நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். ஜெயலலிதா துரோகிதான்.துரோக செயல்களுக்கு அஞ்சாதவர். கம்யூனிஸ்டுகள் வெளியே வந்தால் அவர்களோடு சேர்ந்து மூன்றாவது அணியை அமைக்க முயல்வோம்" என்று கூறியுள்ளார். இத்தகவல் அ.தி.மு.க வுக்கு எட்டியதும், அதன் எம்.எல்.ஏ ஒ.பன்னீர்செல்வம் "உங்களுக்கு உரிய தொகுதிகள் வழங்கப்படும், சரத்குமார், கார்த்திக் கட்சிகளுக்கும் தொகுதிகள் காத்திருக்கிறது. எனவே அவசர பட வேண்டாம்" என்று சமாதானம் செய்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து 5 நாட்கள் ஆகிவிட்ட போதிலும் அ.தி.மு.க-விடமிருந்து எந்த பதிலும் வராததால் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி இடதுசாரிக் கட்சி தலைவர்களுடன் சேர்ந்து தனியாக மூன்றாவது அணியை உருவாக்க வைகோ திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க-வுக்கு தி.மு.க 27 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் இறுதி நேரத்தில் 35 இடங்கள் தந்த அ.தி.மு.க கூட்டணிக்கு வைகோ இடம் மாறினார். இம்முறை அவர் தி.மு.க கூட்டணிக்கு செல்ல முடியாத நிலையின் காரணமாக இடதுசாரிகளோடு சேர்ந்து மூன்றாவது அணி அமைப்பதே சிறந்த வழியாகும்.
எனினும், அடுத்த இருநாட்களில் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க எந்த முடிவும் எடுக்காவிட்டால், ம.தி.மு.க-வும் இடதுசாரிகளும் சேர்ந்து 3-வது அணி அமைப்பதற்குண்டான வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று தெரிகிறது.

0 comments: