Tuesday, 1 March 2011

பிளஸ் 2 தேர்வுகள் நாளை ஆரம்பம் : 7.80 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர். பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுப் பொதுத் தேர்வு நாளை தொடங்கி 25ம் தேதி முடிகின்றன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 5477 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 23,545 மாணவ மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்வைவிட இந்த ஆண்டு கூடுதலாக 33858 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த ஆண்டு தேர்வு எழுதுவோரில் மாணவர்கள் 3 லட்சத்து 36443, மாணவியர் 3 லட்சத்து 87102. மாணவர்களை விட 50659 மாணவியர் கூடுதலாக எழுதுகின்றனர்.   கடந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களை விட இந்த ஆண்டு மாணவர்கள் 14062 பேர் கூடுதலாகவும், மாணவியர் 19796 பேர் கூடுதலாகவும் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வுக்காக தமிழகம், புதுச்சேரியில் 1890 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 95 பள்ளிகளை சேர்ந்த 11517 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 31 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 445 பள்ளிகளை சேர்ந்த 49008 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக சென்னையில் 138 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர தனித் தேர்வர்களாக 57086 பேர் எழுதுகின்றனர். அவர்களில் 15881 பேர் முதல் முறையாகவும், 41205 பேர் ஒன்றுக்கு மேற்பட்டும் தேர்வு எழுதுகின்றனர். டிஸ்லெக்சியா, பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேசாதவர் மற்றும் இதர உடல் ஊனமுற்றோருக்காக ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுகிறது.

பிளஸ் 2 தேர்வுக்கான கேள்வித்தாள் காப்பு மையங்களில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள், தேர்வை குழப்பம் இல்லாமல் நடத்த பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.   அனைத்து மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் கல்வித்துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவார்கள். காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தேர்வு மையங்களை பார்வையிட பறக்கும் படையை அமைத்துள்ளனர். இந்த படையில் 4000 பேர் இடம் பெற்றுள்ளனர். பிட்  வைத்திருத்தல், பிட் அடித்தல், முறைகேடாக நடத்தல், விடைத்தாள் மாற்றிக் கொள்ளுதல், ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய செயல்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும்.

பிளஸ் 2 தேர்வை தமிழ் வழியில் எழுதும் மாணவர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு முதல் தேர்வுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டு 5 லட்சத்து 15281 பேர் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். கேள்வித்தாளை படித்துப் பார்க்க 10 நிமிடமும், விடைத்தாளின் முதல் பக்கத்தில் பதிவெண் உள்ளிட்ட விவரங்களை எழுத 5 நிமிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவியர்கள் அனைவரும் நன்றாக படித்து வெற்றி பெற வேண்டும் என அனைவரையும் அதிரடி செய்தி வாழ்த்துகிறது ,


0 comments: