Sunday 27 February 2011

ஆட்சி பகிர்வுக்கு தி.மு.க தயார்?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி
பெறுமானால், அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடமளிக்கவேண்டும் என்கிற அந்த கட்சியின் கோரிக்கையை திமுக தலைமை சாதகமாக பரிசீலிக்கக்கூடும் என்று திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி ஆர் பாலு பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தி.மு.க வுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் இதுவரை இரண்டு முறை நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்த தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரும், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தி.மு.க குழு உறுப்பினரு மான டி.ஆர்.பாலு, தி.மு.க கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அமையும் ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பதை தவறாக கருத முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்திய நடுவணரசில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் இரண்டாவது முறையாக திமுக அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி, அதேபோல் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடமளிக்கப்படவேண்டும் என்று காங்கிரஸ் உரிமை கோருவதை நியாயமானது என்றே அனைவரும் கருதுவார்கள் என்றும் பாலு தெரிவித்தார்.
எனினும் இது குறித்த இறுதி முடிவை தி.மு.க தலைமை எடுக்கும் என்றும், தாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு 53 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாகவும், இருந்தாலும் காங்கிரஸ் கட்சியினர் 90 தொகுதிகளை கேட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளோடு இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற நிதர்சனத்தை காங்கிரஸ் கட்சியினர் உணர வேண்டும் என்று தி.மு.க அவர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

0 comments: