Tuesday 8 February 2011

ராஜபக்சே கழுத்திலும் விரைவில் சுருக்கு கயிறு விழும்: வைகோ

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வங்க கடலில் மீனவர் ஜெயக்குமார் கழுத்தை நெரித்த கயிறு விரைவில் ராஜபக்சேயின் கழுத்தில் சர்வதேச நீதிமன்றம் சார்பில் விழும். அதுவரை தமிழர்கள் மனதில் எரியும் தீ அணையாது என்று வைகோ தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் மீது சிங்கள ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி கொல்வதை கண்டித்தும், இதை தடுக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் நாகையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தாலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தா.பாண்டியன் தொடங்கி வைத்தார். உண்ணாவிரதத்தில் வைகோ பேசியதாவது:-

இதுவரை ஆயிரம் முறைக்கு மேல் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இது பற்றி பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கூறினால் மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் என்று கூறுகிறார். பஞ்சாப் மீனவர்கள் எல்லை தாண்டினால் பாகிஸ்தான் அரசு கைது செய்து ஒப்படைகிறது.

மேற்கு வங்க மீனவர்கள் பங்களாதேஷ் எல்லைக்கு சென்று விட்டால் கைது செய்து ஒப்படைக்கிறார்கள். ஆனால் இலங்கை கடற்படை மட்டும் ஏன் துப்பாக்கியால் சுட்டு கொல்கிறது. தமிழக மீனவர்களும் இந்திய பிரஜைகள் தானே. இந்திய கடற்படை என்ன செய்கிறது. சூறை காற்றையும், சுறாமீனையும் எதிர்த்து படகு செலுத்தி மீன்பிடிக்கும் மீனவர்களை என் அரசு பாதுகாக்கவில்லை.

இனியும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.இந்திராகாந்திக்கு சரித்திரம் தெரியும் இலங்கையை பற்றி நன்றாக அறிந்திருந்தார். அதனால்தான் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் வசிப்பவர்கள் இலங்கையின் பூர்வ குடிமக்கள் என்றார்.

ஆனால் இன்று தமிழர்கள் வசிக்கும் வீடுகளை சிங்கள ராணுவத்தினர் சுற்றி சுற்றி வருகிறார்கள். இலங்கை முகாம்களில் தங்கியுள்ளவர்களில் 300 பேருக்கு 30 பேர் சாப்பிடக்கூடிய அளவுதான் உணவு வழங்குகிறார்கள். வங்க கடலில் மீனவர் ஜெயக்குமார் கழுத்தை நெரித்த கயிறு விரைவில் ராஜபக்சேயின் கழுத்தில் சர்வதேச நீதிமன்றம் சார்பில் விழும். அதுவரை தமிழர்கள் மனதில் எரியும் தீ அணையாது.

இவ்வாறு வைகோ பேசினார்.

அதன் பிறகு வைகோ புஷ்பவனம் மீனவர் கிராமத்துக்கு சென்றார். சிங்கள ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.25 ஆயிரம் நிதி உதவியும் வைகோ வழங்கினார்.

0 comments: