Thursday, 10 February 2011

8 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பெண் உயிருடன் வந்ததால் பரபரப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே 8 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் புதன்கிழமை உயிரோடு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பேரூரை சேர்ந்தவர் மணிமேகலை என்ற புனிதா (19). இவரை காணவில்லை என அவரது கணவர் ஆனந்தன், ஸ்ரீவைகுண்டம் போலீஸில் 13.4.2002-ல் புகார் அளித்தார். இந்நிலையில், வல்லநாடு அருகே காட்டுப் பகுதியில் 5.4.2002 அன்று எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம் குறித்து விசாரணை நடத்தி வந்த முறப்பநாடு போலீஸôர் அது மணிமேகலைதான் என்ற முடிவுக்கு வந்தனர்.

எனவே, அதை கொலை வழக்காக மாற்றி பேரூரைச் சேர்ந்த வேதமணி மகன் கோயில் பிள்ளை (47), ஆலடியூரைச் சேர்ந்த கோயில் பிள்ளை மகன் பாலசுப்பிரமணியன் (35), குலசேகரநத்தத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் குருநாதன் என்ற ஜெயக்குமார் (30), திருப்புளியங்குடியைச் சேர்ந்த சிவன் மகன் தாசன் (32) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

தூத்துக்குடி முதலாவது விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் 20.2.2007-ல் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், எதிரிகள் 4 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த சூழ்நிலையில், பேரூரைச் சேர்ந்த சண்முகராஜின் வீட்டுக்கு புதன்கிழமை சுமார் 26 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் 2 குழந்தைகளுடன் வந்தார். சண்முகராஜ் வீட்டில் யாரும் இல்லாததால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அந்த பெண் குறித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது பெயர் மணிமேகலை எனக் கூறினார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட மணிமேகலை உயிரோடு வந்திருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவலை அறிந்து, மணிமேகலையை கொலை செய்ததாகக் கூறி கைதான 4 பேரும் அங்கு வந்து நடந்த சம்பவம் குறித்து மணிமேகலையிடம் விசாரித்தனர்.

அப்போது, கடந்த காலங்களில் நடந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், பேரூரில் இருந்து மதுரை சென்று, அங்கு சில காலம் தங்கிய பின்பு திருப்பூர் சென்றுவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், தான் கொலை செய்யப்பட்டதாகவும், அது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டதும் தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்தார். தன்னைக் காணவில்லை என போலீஸில் புகார் செய்திருந்ததை மட்டும் தனது கணவர் தன்னிடம் தெரிவித்திருந்தார் என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து, அந்த 4 பேரும் மணிமேகலையை தூத்துக்குடியில் உள்ள வழக்கறிஞர் திலக் வீட்டுக்கு புதன்கிழமை அழைத்து வந்தனர். வழக்கறிஞர் அந்த பெண்ணிடம் விசாரித்தார்.

இது தொடர்பாக வழக்கறிஞர் திலக் கூறுகையில், மணிமேகலையை கொலை செய்ததாக 4 பேர் மீது போலீஸôர் பொய்யாக வழக்குப் பதிந்துள்ளனர். இதனால், அவர்கள் நால்வரும் சில காலம் சிறையில் இருந்துள்ளனர். எனவே, இதை எதிர்த்து 4 பேர் சார்பில் வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர். மணிமேகலை உயிருடன் வந்துள்ளதால், வல்லநாடு அருகே எரித்துக் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது குறித்து இனிமேல் விசாரணை நடத்தப்படும் என போலீஸôர் தெரிவித்தனர்.

0 comments: