Wednesday, 23 February 2011

காங்கிரஸ் திமுக தொகுதி பங்கீடு சிக்கல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அப்போது எந்த முடியும்  எடுக்கப்படவில்லை. பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது என்று இருதரப்பிலும் கூறப்பட்டது. அதன் பிறகு பா.ம.க. தலைவர் டாக்டர்  ராமதாஸ் கடந்த வாரம் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்தார்.
 
அன்றைய தினமே தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருவதாகவும், 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. தி.மு.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய விடுதலைசிறுத்தைகள், முஸ்லிம்லீக், மூவேந்தர் முன்னேற்றகழகம் ஆகிய கட்சியினரும்  பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர்.
 
இவர்களுக்கும் எத்தனை தொகுதிகள் என்பது அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாததால்தான் தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்குவதில் பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது.
 
கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரசுடன் பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்த பிறகே மற்ற கட்சிகளுக்கு  எத்தனை தொகுதிகள் என்பதை முடிவு செய்ய முடியும். எனவே தான் தொகுதி பங்கீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ் தரப்பில் ஆரம்பத்தில் 80 தொகுதிகளும், பின்னர் 70 தொகுதிகளும் கேட்கப்பட்டது. ஆட்சியில் பங்கு வேண்டும். ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும். குறைந்த பட்ச செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
தி.மு.க. தரப்பில் கூறும் போது கடந்தமுறை  தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க.கட்சிகள் இருந்தன. அப்போது தி.மு.க. வுக்கு 128 தொகுதிகளும், காங்கிரசுக்கு 48 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 31 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இந்த முறையும் அதே முறையில் தொகுதிகளை பகிந்து  கொள்ளலாம்.
 
முஸ்லிம் லீக் கட்சிக்கும் கடந்த முறை ஒதுக்கியது போல தி.மு.க. சின்னத்தில் இடம் கொடுக்கலாம். மீதம் உள்ள தொகுதிகளை விடுதலைசிறுத்தைகள், மூவேந்தர் முன்னணி கழகம் உள்ளிட்ட மற்ற ஆதரவு அமைப்புகளுக்கு கொடுக்கலாம். அவர்களுக்கு கொடுத்தது போக சில தொகுதிகள்  மீதம் இருந்தால் தி.மு.க.வும், காங்கிரசும் பகிர்ந்து கொள்ளலாம்.
 
அதன் அடிப்படையில்தான்  பா.ம.க.வுக்கு 31 தொகுதி  ஒதுக்கப்பட்டது. ஆட்சியில் பங்கு, ஒருங்கிணைப்புகுழு, குறைந்தபட்ச செயல்திட்டம் போன்ற  நிபந்தனைகள் குறித்து தேர்தலுக்கு பிறகு பேசி முடிவு செய்யலாம்.  என கூறப்பட்டதாக தெரிகிறது.
 
ஆனால்  காங்கிரஸ் தரப்பில் எங்கள் கட்சி தொண்டர்கள் விருப்பத்தை  மேலிடத்தில் சொன்னோம். அவர்கள் ஆலோசனைப்படி இந்த கருத்தை வைத்திருக்கிறோம் என்று சொன்னதாக கூறப்படுகிறது. இரு தரப்பிலும் கூறப்பட்ட காரணங்கள் குறித்து இரண்டு  கட்சியினரும் ஆலோசித்து வருகிறார்கள். இன்னும் சிலதினங்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிகிறது.
 
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது தொகுதி பங்கீடு சுமூகமாக முடியலாம் என்று இரண்டு கட்சி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. காங்கிரசுக்கு இந்த முறை மேலும் சில தொகுதிகள் கிடைக்கும் என்று அந்த கட்சி முக்கிய பிரமுகர்  ஒருவர் தெரிவித்தார்.

0 comments: