இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இலங்கையில் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், இந்தியா மலேஷியா ஆகிய நாடுகளிலிருந்து தேங்காயை இறக்குமதி செய்யும்
நடவடிக்கையில் இறங்குவதாக அரசு கடந்த வாரம் அறிவித்தது. அரசின் இந்த நடவடிக்கை கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக தனது கோபத்தை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் தேங்காய் உற்பத்தியில் இலங்கை தன்னிரைவு பெற்றதோடு அல்லாமல், அதை 750 வருடங்களாக உலகளவில் இலங்கை ஏற்றுமதியும் செய்து வந்ததாக குறிப்பிட்ட அவர் தற்போது தேங்காயை கேரளாவிலிருந்து இறக்குமதி செய்யும் நிலை தோன்றியது துரதிருஷ்டமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"இது ஒரு உலக சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். இதை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் பதிவு செய்ய வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், அரசின் ஒரு மூத்த அதிகாரியோ, இந்த விடயம் குறித்து ஒரு உறுதியான முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் நாட்டுக்குள் வரும் தேங்காய்களில் நோய் தாக்குதல் இருக்கிறதா என்பதும் கண்டறியப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நோய் அச்சம்
இந்த விடயம் தொடர்பில் நாட்டின் சட்டங்கள் மிகவும் கடுமையாக இருக்கின்றன என்று அரசின் தேங்காய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் சி ஜெயசேகர பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இந்தியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற தேங்காய் விளையும் நாடுகளில், அப்பயிர் பலவிதமான நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.
இதில் வில்ட் எனப்படும் வாடல் நோயின் காரணமாக தென்னை மரங்கள் மஞ்சள் நிறமாக மாறி, தேங்காயின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
தேங்காய், பனைப் போன்ற பொருட்களை ஆராய்ச்சிகளுக்காக மட்டுமே இலங்கை சிறிய அளவில் இறக்குமதி செய்யும் எனவும் டாக்டர் ஜெயசேகர கூறியுள்ளார்.
நாட்டில் தேங்காயின் விலை மீதும் தமது அமைச்சகம் ஒரு கண் வைத்துள்ளது என்றும் அரசின் அந்த மூத்த அதிகாரி கூறுகிறார். இலங்கையில் தற்போது ஒரு தேங்காய் 40 ரூபாய்கள் என்கிற சராசரி விலையில் விற்கப்படுகிறது. சராசரி மக்களுக்கு இந்த விலை கட்டுப்படியாகாத நிலை உள்ளது.
இலங்கையின் உணவு வகைகளில் முக்கிய இடத்தைக் கொண்டுள்ள தேங்காய்க்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்று விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞர் சரத் ஃபெர்ணாண்டோ கூறுகிறார்.
பெரிய அளவிலான தேங்காய்ப் பண்ணைகள் வீடுகள் கட்டுவதற்காக விற்கப்பட்டதும், தேங்காய் பால் ஏற்றுமதிக்காக பெரு நிறுவனங்கள் நாட்டில் உபரியாக இருக்கும் தேங்காய்களை வாங்கியதுமே, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு காரணம் என்றும் ஃபெர்ணாண்டோ கூறுகிறார்.
இலங்கையின் தென் மாவட்டங்களான மாத்தரை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளிலும் இலங்கைக்கே உரிய வில்ட் நோய் தாக்குதல் இருந்தாலும், அது கொழும்புக்கு வடபகுதியில் இருக்கும் இடங்களுக்கு பரவாமல் தடுக்க வெற்றிகரமான நடவடிக்கைகள் எடுக்கபப்ட்டிருந்தன என்றும் அப்பகுதி விவசாயிகள் கூறுகிறார்கள்.
0 comments:
Post a Comment