Sunday, 2 January 2011

நீங்கள் விரும்பும் கூட்டணியே அமையும் வெற்றிக்கனி பறிக்கத் தயாராகுங்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
 சென்னை:சிலகட்சிகளுடன் அ.தி.மு.க.கூட்டணி தொடர்பாக பேசி வருகிறது. இன்னும் சில நாட்களில் அனைவரும்
விரும்பும் கூட்டணி தொடர்பான ஒப்பந்தங்கள் உருவாகும். அ.தி.மு.க.வுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் காத்துள்ளது. தி.மு.க.வை வரும் தேர்தலில் வீழ்த்த மும்முரமாகச் செயல்படுங்கள் என்று கூறியுள்ளார் அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
அ.தி.மு.க.வின் பொதுக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடந்தது. ஜெயலலிதா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கூட்டணி தொடர்பான இறுதி முடிவு எடுக்க ஜெயலலிதாவுக்கு அதிகாரம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது;
இந்த பொதுக் குழுக் கூட்டம் வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு என்று கூறினார்கள். இந்த பொதுக்குழு பிற்காலத்திலும் எக்காலத்திலும் வரலாற்று சிறப்பு மிக்க கூட்டம்தான். இன்னும் 4 மாதத்தில் நாம் சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கப்போகிறோம். 2011 ஆம் ஆண்டு நாம் சந்திக்கப்போகிற சட்டமன்றத் தேர்தல் போராட்டம், நாம் இதுவரை சந்தித்த போராட்டங்களில் மிகப்பெரிய போராட்டமாக இருக்கப்போகிறது. மிகப்பெரிய போராகவும் இருக்கப்போகிறது.
1967 ஆம் ஆண்டு அண்ணாவால் வரலாற்று திருப்பு முனை நிகழ்த்தப்பட்டது. அண்ணா முதல்அமைச்சராகப் பொறுப்பு ஏற்றதில் இருந்து இன்று வரை ஒரு திராவிட கட்சிதான் தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.
ஆனால் அண்ணா உருவாக்கிய தி.மு.க.இன்று இல்லை. அ.தி.மு.க.ஆட்சி எப்போது அமையும் என்று மக்கள் ஏங்கிக்கிடக்கிறார்கள். நாம் இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்றால் அ.தி.மு.க.தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
2011 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பது மட்டும் அல்ல 1967 ஆம் ஆண்டு அண்ணா எப்படி ஒரு வரலாற்று திருப்பு முனையை ஏற்படுத்தினாரோ அது போன்ற திருப்பு முனையை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு நமக்கு காத்திருக்கிறது.
நாம் அனைவரும் நமது கடமைகளை சரிவரச் செய்தால் நாம் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டால், உண்மையாக உழைத்தால் 2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஒரு வரலாற்று திருப்புமுனையை ஏற்படுத்தி எக்காலத்திலும் அ.தி.மு.க.ஆட்சிதான் தமிழகத்தில் இருக்கும் என்ற நிலையை நாம் உருவாக்கமுடியும்.
இது ஏதோ உங்களை மகிழ்விக்க வேண்டும் என்று சொல்வதற்காக கூறும் வெற்று வார்த்தை அல்ல. நாம் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயல்பட்டால் எக்காலத்திலும் தி.மு.க.வை ஒழித்துக் கட்டி தி.மு.க. எழுந்திருக்க முடியாத நிலையை நம்மால் உருவாக்க முடியும்.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தேர்தல் வந்தபோது கூட சிலருக்குத்தான் சட்டமன்ற உறுப்பினராக ஆகும் வாய்ப்பு கிடைத்தது. எத்தனையோ பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர்.வேட்பாளர் பட்டியலை அறிவித்த பின்னர் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் அந்த வருத்தம் அடங்கிய பின்னர் இது நம்முடைய தலைவர் அறிவித்த வேட்பாளர். ஆகவே அ.தி.மு.க.ஆட்சி அமையவேண்டும். மீண்டும் எம்.ஜி.ஆர்.முதலமைச்சராக வரவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பணியாற்றினார்கள். அதனால் தான் எம்.ஜி.ஆர்.திரும்பத் திரும்ப 3 முறை தேர்தலில் வெற்றிபெற்று 3 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி ஏற்க முடிந்தது. ஆனால் அண்மைக்காலமாக வேறு ஒரு புதிய கலாசாரத்தை நாம் கழகத்தில் கண்டுகொண்டு இருக்கிறோம். அண்மைக்காலமாக நமது கழக உறுப்பினர்களே நம்முடைய கழக வேட்பாளர்களைத் தோற்கடிக்கின்ற பணியாற்றுகின்ற ஒரு புதிய கலாசாரத்தை நாம் பார்க்கிறோம். 2006 ஆம் ஆண்டு தேர்தலில் இதுதான் நடந்தது. நம்மை தி.மு.க.தோற்கடிக்கவில்லை. நம்மை நாமே தோற்கடித்துக் கொண்டோம்.
இதை எல்லாம் எதற்காக சொல்லுகிறேன் என்றால் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் என்ன நடந்ததோ அது 2011 ஆம் ஆண்டும் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் சொல்லுகிறேன். இந்த முறை நான் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டு அம்மா அறிவித்த வேட்பாளர், அ.தி.மு.க.வெற்றிபெற வேண்டும். அ.தி.மு.க.மீண்டும் ஆட்சி அமையவேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே நமது கடமை என்ற உணர்வோடு நாம் அனைவரும் செயல்படவேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கப் போகிறோம். கூட்டணிபற்றி அம்மா ஒருவார்த்தைகூட சொல்லவில்லையே என்று நீங்கள் அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். எப்படிப்பட்ட கூட்டணியை நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என்பது எனக்குத் தெரியும். எந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமையவேண்டும் என்று விரும்புவீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். கவலைப்படாதீர்கள் நீங்கள் விரும்புகிற கூட்டணி அமையும். அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும். வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் நான் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், அந்த பேச்சுவார்த்தை முடிவுகள் இன்னும் வரவில்லை. கூட்டணி குறித்து இறுதி முடிவு ஆவதற்கு ஒப்பந்தம் ஏற்படுவதற்கு இன்னும் சில நாட்கள் பிடிக்கும். எனவே தற்சமயம் நான் அதுபற்றி எதுவும் சொல்லமுடியவில்லை.
அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்போது கூட்டணி குறித்து உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு செய்தியை சொல்லலாம் என்றுதான் நான் விரும்பினேன். ஆனால் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில் இந்தப் பொதுக்குழுவைக் கூட்டி ஆக வேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்பட்டது. இந்த நாளுக்குள் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவில்லை. ஆனால், நான் ஏற்கனவே சொன்னதுபோல் இன்னும் சில நாட்களில் இந்தப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துவிடும். நீங்கள் விரும்புகிற கூட்டணி அமையும் என்பதை மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மிக ஒளிமயமான பிரகாசமான எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கிறது.
எனவே, பீடுநடைபோடுங்கள், வீறு நடைபோடுங்கள், புதிய வரலாறுபடைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்படுங்கள், வெற்றிக்கனியைப் பறிக்கத் தயாராகுங்கள்.

0 comments: