Wednesday 8 September 2010

நடிகர் முரளி மரணம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

சென்னை, செப்.8:பிரபல திரைப்பட நடிகர் முரளி மாரடைப்பால்
மரணமடைந்தார். அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைப்பட பிரமுகர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
.
கடந்த 1984ம் ஆண்டு கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில் அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான பூ விலங்கு படத்தின் மூலம் அறிமுக மானவர் முரளி. அவருடைய தந்தை சித்தலிங்கய்யா கன்னடத்தில்தயாரிப்பாளராக இருந்தவர். முதல் படத்திலேயே நடிப்பில் முத்திரை பதித்த முரளி அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பகல் நிலவு படத்தில் நடித்தார். தொடர்ந்து அவர் நடித்த புதுவசந்தம், இதயம், அதர்மம், காலம் எல்லாம் காதல் வாழ்க உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

மேலும் சேரன் இயக்கத்தில் வெளியான பாரதிகண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு,தேசியகீதம் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து புகழ்பெற்றார். காதல் கதையை மையமாக கொண்ட வெளியான கதைகளில் அவர் தனக்கென தனி இடத்தை தேடிக் கொண்டார். அவர் நடிப்பில் வெளியான புதுவசந்தம், இதயம் ஆகிய படங்கள் வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக விக்ரமன் இயக்கத்தில் வெளியான புதுவசந்தம் திரைப்படம் நட்புக்கு புதிய இலக்கணம் வகுத்து பாராட்டைப் பெற்றது.இதயம் திரைப்படம் சொல்ல முடியாத காதல் தவிப்பை வெளிப்படுத்தும் படமாக பாராட்டைப் பெற்றது. பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கடல்பூக்கள் படத்திற்கு தமிழக அரசின் விருது கிடைத்தது. முரளி எப்போதும் இளமையான வேடங்களிலேயே நடித்து வந்தார். எல்லா படங்களிலும் அவர் பெரும்பாலும் கல்லூரி மாணவனாகவே தோன்று வார். சிவாஜி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு, சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களோடும் அவர் இணைந்து நடித்திருக்கிறார்.

சமீபத்தில் அவரது மகன் அதர்வா பானா காத்தாடி மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்நிலையில் நடிகர் முரளிக்கு நள்ளிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவருக்கு வயது 46. இதனையடுத்து ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் மாரமடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக மருத்து வர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து வளசரவாக்கத்தில் உள்ள வீட்டிற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் ஏராளமான திரைப்பட பிரமுகர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முரளியின் தந்தை கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்ற போதிலும் அவரது தாயார் தமிழ் பெண்ணாவார். மேலும் அவர் பெங்களூரில் பிறந்தாலும் தமிழகத்தைச் சேர்ந்தவராகவே வளர்ந்து வந்தார். இலங்கை தமிழர் ஆதரவு போராட்டங்களில் அவர் கன்னட எதிர்ப்பையும் மீறி கலந்து கொண்டிருக்கிறார். முரளி மற்றவர்களுக்கு உதவும் பண்பு கொண்டவராக அறியப்படுகிறார்.வெளியுலகுக்கு தெரியாமல் அவர் பலருக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்திருக்கிறார்.

0 comments: