Friday 10 September 2010

இன்று உலகம் முழுவதும் ரமதான் பண்டிகை தலைவர்கள் வாழ்த்து

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ரம்ஜான் பண்டிகையையொட்டி அனைத்துக்கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

அருள் மறையாம் திருமறை குர்ஆன் அருளப்பட்ட இந்தப் புனித மாதத்தில் நோன்பிருக்க வேண்டுமென்பது இறைவனின் கட்டளையாகும். நோன்பிருப்பதன் மூலம் பொறுப்புகளை சுமக்கும் ஆற்றலையும், சிந்திப்பதற்கான சந்தர்ப்பத்தையும், கட்டுப்படுத்திக் கொள்கின்ற சக்தியையும் இஸ்லாமியர்கள் பெறுகிறார்கள்.

இந்த மகத்தான ரமலான் மாதத்தில் புனித நோன்பினை மேற்கொண்டு, இறை உணர்வுடன் ஈகைத் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய ஈத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதுடன், அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, இரக்கம், கருணை, ஒற்றுமை உணர்வு, சகோதரத்துவம் போன்ற நற்பண்புகள் மேலோங்கட்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள வாழ்த்து:-

ஈகைத் திருநாளாக இஸ்லாமியப் பெருமக்களால் போற்றி வணங்கப்படும் ரம்ஜான் பண்டிகை உலகெங்கும் உவகையோடு கொண்டாடப்படுகிறது.

இந்நன்னாளில் இறைவனின் இறுதித் தூதர் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் உலகுக்கு போதித்த மனித நேயம், நல்லொழுக்கம், அன்பு, அமைதி, சமாதானம், சகோதரத்துவம் ஆகிய உயரிய நெறிகளை ஏற்று வாழ்ந்து, நாட்டில் மத, இனப்பிரிவுகளிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு மிளிர்ந்து, வன்முறைகள் ஒழிந்து நல்லிணக்கம் உருவாக அனைவரும் ஒன்றினைந்து உழைப்போம், உயர்வோம் என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய மந்திரி ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து:-

தன்னை வருத்திக் கொண்டு இறைவனைத் தேடுவதுதான் உண்மையான வழிபாடாகும். இஸ்லாமியப் பெருமக்களின் தொழுகை அதை உலகுக்கு உணர்த்திக் காட்டுகிறது. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும், வேறுபாடியின்றி அனைவரும் சமத்துவம் பேண வேண்டும் என்பதே ரம்ஜான் பண்டிகையின் உயர்ந்த லட்சியமாகும்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து:-

ரமலான் நோன்பு என்பது “பாவங்களை சுட்டெரித்தல்” என்று கூறப்பட்டிருக்கிறது. ரமலான் மாதம் குர்-ஆன் அருளப்பட்ட மாதமாகும். அது அகிலத்தார் அனைவருக்கும் ஒரு பொதுவான நல் உபதேசம், மனிதர்கள் அனைவருக்கும் நல்வழிகாட்டியாக திகழ்வது குர்-ஆன். நேர் வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்திய, அசத்தியத்தை பிரித்து காட்டக் கூடியதுமான குர்-ஆனில் அருளப்பட்ட போதனைகளை இந்நாளில் நினைவுகூர்ந்து அவற்றை கடைப்பிடிக்க சூளுரைத்துக் கொள்வோம்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து:-

மாதங்களில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் மாதம் புனிதமானது. ஒரு புறம் இல்லாதவர்கள் பெருகியும், மறுபுறம் செல்வான்கள் சிலர் அதிகரித்தும் இருப்பதால், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு சகோதரத்துவம் சீர்குலைக்கப்படுகிறது.

இல்லாதவர்கள் அனுபவிக்கும் இன்னலை அனைவரும் உணரச் செய்வதற்கே, நபிகள் நாயகம் அவர்கள் நோன்பு இருப்பதை ஒரு முக்கிய கடமையாக இஸ்லாமியர்களுக்கு எடுத்துரைத்தார். அதன்படி தங்களை வருத்திக் கொண்டு நோன்பினைக் கடைப்பிடித்த இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது இதய மார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து விவரம்:-

ரமலான் என்ற பெயருக்கு ஏற்பப் புலன்களை, இச்சைப்படி சென்ற இடத்தில் செலவிடாமல், பசித்து இருந்து, தனித்து இருந்து, இறை அச்சத்துடன் விழித்து இருந்து, மறுமையை நினைத்து இருந்து, பாவங்களை எரிக்கும் பரிபக்குவம் பேரணியவர்கள், அதைக் கொண்டாட ஏழை எளிய மக்களுக்கு வரியாக “ஜக்காத்” என்னும் நன்கொடைகளை வாரி வழங்கும்- ஈத்துவக்கும் இன்பம் துய்க்கும் இப்பொன்னாளில் கொள்ளும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது.

மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனின் வாழ்த்து:-

“ரமலான்” மாதத்தின் நிறைவிலும் “ஷவ்வால்” மாதத்தின் துவக்கத்திலும் மூன்றாம் பிறை காணும் நாளில் ஈத் திருநாள் முன் இந்த ஈகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை “மனித நேயத் திருவிழா” என்றே அழைக்கலாம்.

இவ்விழாவின் உள்ளீடான கருத்தானது இசுலாமியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பொருந்துவதாகும்.

எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், வசந்தகுமார், எம்.எல்.ஏ., திருநாவுக்கரசர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவா ஹிருல்லா, இந்திய ஜன நாயக கட்சி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் சென்னை மாவட்ட தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், தமிழ்நாடு மதசார்பற்ற ஜனதா தள பொதுச் செயலாளர் இதய வண்ணன், தமிழ் நாடு மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் சம்சுதீன், ராஜீவ் மக்கள் காங்கிரஸ் தலைவர் நரசிம்மன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், கவிஞர் வீரை கறீம், ஐக்கிய ஜனதா தள மாநில பொதுச் செயலாளர் ராஜகோபால், வன்னியர் கூட்டமைப்பு தலைவர் ராமமூர்த்தி வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
அதிரடி செய்தி வாசகர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

0 comments: