Monday 30 August 2010

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்கு உறுதி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட  நெடுசெழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு
தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அதில் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரியிலும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கோவை வேளாண்மை பல்கலைக்கழக பஸ்சுக்கு ஓரு கும்பல் தீ வைத்தது. இதில் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகி உயிர் இழந்தனர்.

இது தொடர்பாக அ.தி.மு.க.வினர் 31 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. சேலம் முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதி கிருஷ்ணராஜா விசாரித்தார். விசாரணை முடிவில் தர்மபுரி நகர அ.தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மாது என்ற ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியப்பன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தர்மபுரி ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் ராஜேந்திரன் உள்பட 25 பேருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவர் விடுதலை செய்யப்பட்டார். 2 பேர் வழக்கு விசாரணையின் போது இறந்து விட்டனர்.

சேலம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து 28 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். ஆனால் ஐகோர்ட்டு 3 பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. மற்ற 25 பேருக்கும் கீழ் கோர்ட்டு தனித்தனியாக தண்டனை காலத்தை 7 ஆண்டு அனுபவிக்க உத்தரவிட்டு இருந்தது. அதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் அவர்கள் தண்டனை 2 ஆண்டாக குறைந்தது.

இந்த நிலையில் தூக்கு தண்டனை பெற்ற நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேரும் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, பி.எஸ். சவுகான் ஆகியோர் இதை விசாரித்தனர். கடந்த மாதம் 28-ந்தேதி விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இன்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். நெடுசெழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு அளித்தனர்.

அவர்களுடைய அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:-

அரசியல் காரணங்களுக்காக 3 அப்பாவி மாணவிகள் கொல்லப்பட்டு உள்ளனர். நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் இந்த கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். திட்டமிட்டே பஸ்சுக்கு தீ வைத்துள்ளனர்.

இந்த நடவடிக்கை சமூகத்துக்கு எதிரானது. காட்டுமிராண்டி தனமானது. மிகவும் கொடுமையான செயல். சுப்ரீம் கோர்ட்டு மிகவும் அரிதான வழக்கில்தான் தூக்கு தண்டனை வழங்கி வருகிறது. இதுவும் ஒரு அரிதான வழக்கு. எனவே 3 பேருக்கும் சென்னை ஐகோர்ட்டு அளித்த தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுகிறது.

மாணவிகள் வந்த சுற்றுலா பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டபோது போலீசார் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கில் மேலும் தண்டனை பெற்ற 25 பேரும் ஐகோர்ட்டு அறிவித்தப்படி தண்டனையை அனுபவித்து இருந்தால் அவர்களை விடுதலை செய்யலாம்.

இவ்வாறு கூறியுள்ளனர்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் இதில் இருந்து 3 பேரும் தப்பிக்கவும் வாய்ப்பு உள்ளது. அடுத்து அவர்கள் தீர்ப்பை மறு சீராய்வு செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யலாம். இதிலும் தூக்கு உறுதி செய்யப்பட்டால் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பலாம். அதுவும் நிராகரிக்கப்பட்டால் மட்டுமே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்.

மறு சீராய்வு மனுவில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ஜனாதிபதி கருணை மனுவை ஏற்றுக்கொண்டாலோ அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறுத்தப்படும்.

0 comments: