Tuesday 6 July 2010

முஸ்லிம்களின் மனதை புண்படுத்திய பேராசிரியருக்கு அரிவாள் வெட்டு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
 கேரளத்தில் கல்லூரி வினாத்தாளில் முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் விதமாக கேள்வி கேட்ட பேராசிரியரை அரிவாளால் வெட்டினர். ஆனால் அவர் உள்ளங்கையில் வெட்டுப்பட்டதுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
 இடுக்கி மாவட்டம் தொடுப்புழாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் பேராசிரியர் ஜோசப். இவர், கடந்த ஏப்ரலில் அக்கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் பி.காம் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு வடிவமைத்த வினாத்தாளில் முகமது நபி தொடர்பாக ஒரு கேள்வி கேட்டிருந்தார். அந்தக் கேள்வி இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் விதமாக இருந்ததாக கூறப்படுகிறது.
 இதனால் கொதித்தெழுந்த அந்த மாநில இஸ்லாமியர்கள், ஜோசப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஜோசப்பின் செயலுக்காக அந்தக் கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கேட்டது. ஜோசப்பை கல்லூரியை விட்டும் தாற்காலிகமாக நீக்கியது.
 இதனிடையே, ஜோசப்புக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் ஜாமீனில் வெளிவந்து இருந்து வருகிறார்.
 இந்நிலையில் ஜோசப், அவரது தாயார், சகோதரி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மூவாட்டுப்புழாவில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்து காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் ஜோசப்பின் வலது உள்ளங்கையிலும், இடது காலிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உள்ளங்கையில் பலமான வெட்டுக்காயம் ஏற்பட்டதால் அதை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சரி செய்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 இந்த சம்பவம் குறித்து அந்த மாநில போலீஸôர் கூறுகையில், முஸ்லிம்கள்தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடிவருகிறோம் என்றனர்.