Friday 25 June 2010

திருப்பதியை மிஞ்சியது மாநாட்டு வளாகம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு என்ற தமிழ் திருவிழா நடைபெற்று வருகிறது. மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி கண்காட்சி அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.
 
மாநாட்டில் கலந்து கொள்ளவும், கண்காட்சியை பார்வையிடவும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தவண்ணம் உள்ளனர். நேற்று கண்காட்சியை பார்வையிட பொது மக்கள் கூட்டம் அலைமோதியது.
 
கோவை நகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, துடியலூர், மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பொது மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து குவிந்தனர்.
 
நேற்று பிற்பகல் மாநாடு பந்தல், கண்காட்சியை காண கூட்டம் அலைமோதியது. மாநாடு நடைபெறும் கொடிசியா அரங்கில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது.
 
மாநாடு நடைபெறும் இடம் அருகில் உள்ள அவினாசி சாலையில் மக்கள் சாரை, சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

ரோட்டின் இருபுறமும் போலீசார் அரண்போல் நின்று பொதுமக்களை கொடிசியா வளாகத்திற்கு செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்தினர்.
 
பிற்பகலில் இருந்து நள்ளிரவு வரை மாநாடு பந்தல், கண்காட்சி அரங்கில் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை கியூவில் நின்று 2 மணி நேரம் வரை காத்திருந்து கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

ஏராளமானோர் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர். கண்காட்சியை வாண்டுகளும் மிகவும் ரசித்து பார்த்தனர். கண்காட்சியை பார்க்க வருபவர்களின் கூட்டம் திருப்பதியை மிஞ்சி விட்டது போல் உள்ளது.
 
இரவு 7 மணிக்கு மேலும் கூட்டம் அலைமோதியது கண்காட்சி அரங்கம் இரவு 9மணிக்கு மூடப்பட்டது. பலர் கண்காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் இன்று சீக்கிரமே வந்து கண்காட்சியை கண்டிப்பாக பார்த்து விடுவோம் என மகிழ்ச்சி பொங்க கூறினர்.
 
கண்காட்சியை பார்க்க வந்த பொதுமக்கள் உணவு கூடத்துக்கும் சென்று தங்களுக்கு தேவையான பதார்த்தங்களை சாப்பிட்டு பசியாற்றி கொண்டனர்.
 
உலகத்தமிழ் மாநாட்டில் கோவை திருவிழாபோல் காணப்படுகிறது.
நன்றி : மாலைமலர்  
 
 
 

0 comments: