Thursday 10 June 2010

8ம் வகுப்பு வரை பெயிலாக்கக் கூடாது சென்னை உயர்நீதிமன்றம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பள்ளியில் 8ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளை பெயிலாக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த கலைக்கோட்டுதயம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

எனது மகன் தமிழ் பிரபாகர உதயம் சென்னை எழும்பூரில் உள்ள டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நர்சரி வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை பெயிலாகாமல் படித்து வந்தான். 2009-10-ம் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு படித்தான். தேர்வு முடிவில் அவனை பள்ளி நிர்வாகம் பெயிலாக்கிவிட்டது.

சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தொடக்கக் கல்வி வரைகூட படிக்காமல் இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் படிப்பை பாதியிலே விட்டுவிடுகின்றனர். இதனால்தான் குழந்தை தொழிலாளர்கள் உருவாகின்றனர்.

இதை தவிர்க்கும் நோக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு, மத்திய அரசு 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு (8-ம் வகுப்பு வரை) இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஆனால் இந்த சட்டத்தை துரதிருஷ்டவசமாக இங்குள்ள மெட்ரிக் பள்ளிகள் முனைப்போடு அமல்படுத்தவில்லை. மார்க் குறைவு, வருகைப் பதிவு குறைவு, படிப்பில் மந்தநிலை ஆகிய காரணங்களைக் கூறி ஆயிரக்கணக்கான குழந்தைகளை பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகள் பெயிலாக்கிவிடுகின்றன.

இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் 16-ம் பிரிவின் படி, 8-ம் வகுப்பு வரை எந்தக் குழந்தையையும் பெயிலாக்கவோ, பள்ளியை விட்டு வெளியேற்றவோ கூடாது. இந்த சட்டத்தை மீறும் வகையில் டான்பாஸ்கோ மெட்ரிக் பள்ளி எனது மகனை பெயிலாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, எனது மகனை 7-ம் வகுப்பிற்கு பாஸ் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையடுத்து டான் பாஸ்கோ பள்ளிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. டான்பாஸ்கோ பள்ளி சார்பில் வக்கீல் நர்மதா சம்பத் ஆஜராகி வாதிடுகையில்,

மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனரின் அறிவுரையின் அடிப்படையில்தான் இறுதித் தேர்வுக்குப் பிறகு மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி முடிவு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில்தான் செயல்பட்டோம்.

5-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் 6-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டும் என்று எங்களுக்கு எந்த உத்தரவும் மெட்ரிக் இயக்குனரிடம் இருந்து வரவில்லை.

கல்வித்துறையால் நியமிக்கப்பட்ட பள்ளி முதல்வர்கள் குழுவால் மாணவர்களின் தேர்ச்சி ஆய்வு செய்யப்பட்டு, மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற்று அதன் பின்னரே 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு தேர்ச்சி முடிவுகளை வெளியிடுகிறோம் என்றார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதி பால்சம்பத்குமார்,

8-ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது என்ற மத்திய அரசின் சட்டம் (இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டம்) 1.4.2010 அன்று அமலுக்கு வந்தது. அதற்குப் பிறகுதான், 6-ம் வகுப்பு மாணவனை பெயிலாக்குவதற்கு இணக்கமான சுற்றறிக்கையை இங்குள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அனுப்பி இருக்கிறார். மத்திய அரசின் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, அதற்கு முரணாக பிறப்பிக்கப்பட்டுள்ள இதுபோன்ற சுற்றறிக்கை, சட்ட விரோதமானது என்பது தெளிவு. அது செல்லத்தக்கதல்ல.

இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில்தான் பள்ளி நிர்வாகம் இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்து, குறைவான மதிப்பெண் பெற்ற மாணவன் தமிழ் பிரபாகர உதயமை பெயில் ஆக்கி இருக்கிறது. இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் தன்னை பெயிலாக்கியது தவறு என்றும் மத்திய அரசின் சட்டப் பிரிவுகள் 4, 16, 30 ஆகியவற்றின் படி தன்னை 7-ம் வகுப்புக்கு தேர்ச்சி செய்ய வேண்டும் என்றும் அந்த மாணவன் தரப்பில் கேட்கப்பட்டு உள்ளது.

16-ம் பிரிவின்படி, 8-ம் வகுப்பு வரை எந்த ஒரு மாணவனையும் பெயிலாக்கி அதே வகுப்பில் போடுவதும், பள்ளியை விட்டு வெளியே அனுப்புவதும் கூடாது. சட்டவிரோதமான சுற்றறிக்கையை பின்பற்றி இந்த மாணவனை பள்ளி நிர்வாகம் தேர்ச்சி செய்யாமல், அதே வகுப்பில் இருக்கச் செய்துள்ளதால், அதுவும் சட்ட விரோதமாகும்.

எனவே அரசியல் அமைப்புச் சட்டத்தின் 21-ஏ பிரிவு மற்றும் கட்டாயக் கல்விக்கான மத்திய அரசின் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த மாணவனை பெயிலாக்குவதற்கான உத்தரவு செல்லத் தக்கதல்ல என்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

மேலும், இந்த மாணவனை தேர்ச்சி செய்து 7-ம் வகுப்பில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் விவாதத்தின்போது, மாணவனை வேறு பள்ளியில் சேர்ப்பதற்காக மாற்றுச் சான்றிதழுக்கு (டி.சி.) விண்ணப்பிக்க இருப்பதாக மாணவன் தரப்பில் கூறப்பட்டது. பள்ளி நிர்வாகமும் டி.சி. வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

எனவே வேறு பள்ளியில் 7-ம் வகுப்பில் சேர்ப்பதற்காக டி.சி. வாங்குவதற்கு மாணவன் தரப்பில் டான்பாஸ்கோ பள்ளியிடம் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் மத்திய அரசுச் சட்டத்தின் 16-ம் பிரிவின் அடிப்படையில் மாணவனை கட்டாயம் வெளியேற்றும் நோக்கத்தில் டி.சி.யை கொடுக்க முடியாது.

ஆகவே மாணவன் தரப்பில் தானாக முன்வந்து கேட்கப்பட்டால் மட்டுமே அவனுக்கு பள்ளி நிர்வாகம் டி.சி.யை கொடுக்க வேண்டும். அவனுக்கு 7-ம் வகுப்புக்கு செல்வதற்கான தேர்ச்சியையும் பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும்.

கல்வி பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்று 1993-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புதான் இதுபோன்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதற்கு காரணமாக உள்ளது. கல்வி பெறுவதற்கு இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்று 2002-ம் ஆண்டிலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புகளை கண்டிப்பாக அமல்படுத்தும் விதத்தில், அனைவருக்கும் கட்டாய கல்வி அளிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு 2009-ம் ஆண்டு இந்த சட்டத்தை இயற்றியது. அது 1.4.2010 அன்று அறிவிப்பாணையாக வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது. மத்திய அரசின் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, அதற்கு முன்பு பின்பற்றப்பட்ட மாநில அரசின் சட்டங்கள் செல்லாததாகிவிடும். சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன என்றார்.
நன்றி :  N.I.N

0 comments: