Friday 14 May 2010

திமுக பக்கம் பாமக

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ்நாட்டின் பாட்டாளி மக்கள் கட்சி, இந்த தடவை திமுக பக்கம் சாய்ந்து சட்ட மன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. அந்தக் கட்சி திமுக, அதிமுக என்று மாறி மாறி கூட்டு சேர்ந்து குறைந்தபட்சம் 20 சட்டமன்ற இடங்களில் வென்று அரசியல் நடத்தி வருகிறது. அந்த வியூகத்தின் அடுத்த கட்டமாக இப்போது அந்தக் கட்சி கருணாநிதி புகழ் பாடலை இசைக்கிறது. பாமகவில் நான்காவது நிலை தலைவராக இருக்கும் வன்னியர் சங்கத் தலைவரான காடு வெட்டி குரு, “திமுக தலைவர் கருணாநிதியை மீண்டும் முதல் வராக்கப் போகிறோம்,” என்று சூளுரைத்து இருக்கிறார். இதே குருதான், சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவை அதிமுக பக்கம் கொண்டு சென்றவர். அதற்குக் கைமாறாக சிறைக்குச் சென்றவர். “இப்போது நிலைமை மாறிவிட்டது. அதிமுகவை கைவிட்டு மறுபடியும் திமுகவைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள பாமக முடிவு செய்துவிட்டது,” என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. “தமிழக முதல்வர் கருணாநிதியை டாக்டர் ராமதாஸ், அன்புமணி, பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ஜி.கே.மணி மற்றும் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் விரைவில் சந்தித்து வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்த உள்ளோம்,” என்றும் பாமக குரு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, நாடாளு மன்றத்தில் முக்கியத்துவத்தை இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மாநிலத்திலும் அந்தக் கட்சி வாழ்வா சாவா என்ற நிலைக்கு வந்து கொண்டுள்ளது. இந்த ஆண்டில் அல்லது அடுத்த ஆண்டில் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோற்று விட்டால் அந்தக் கட்சி பிறகு தலை எடுப்பது மிகவும் சிரமமானதாக ஆகிவிடும். இப்படி ஒரு நிலைக்கு அதிமுகவைக் கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்துள்ள திமுகவும் பாமகவை அரவணைத்துக் கொள்ள முடிவு செய்து விட்டதாக அண்மைய அரசியல் நிகழ்வுகள் காட்டுகின்றன. என்றாலும் அத்தகைய ஒரு நிலை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் அதிமுக தன்னுடைய சட்டாம் பிள்ளைப் போக்கைத் தளர்த்திக் கொள்ளக் கூடும் என்று சிலர் தெரிவிக்கிறார்கள். அதிமுக அப்படிச் செய்யும் பட்சத்தில், நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கட்சியானது அதிமுகவுடன் நெருங்கி வரும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுக- தேமுதிக கம்யூனிஸ்டுகள் எல்லாம் சேர்ந்து பெரிய கூட்டணியை ஏற்படுத்தி தேர்தலைச் சந்திக்கும்போது, திமுக அணியில் பாமகவும் இருந்தால் அதிமுக அணியை அலட்சியமாகத் தோற்கடித்து விட முடியும் என்று திமுக கணக்குப் போடுகிறது. அரசியலில் பெரும் ஏமாற்றம், தோல்வியைச் சந்தித்து வேறு வழியின்றி இருக்கும் பாமகவும் அதிமுகவைவிட திமுகவே இப்போதைக்குச் சாலச் சிறந்தது என்று கணக்குப் போடுகிறது. திமுக பக்கம் போனால் பாமக நிறுவனர் ராமதாசின் புதல்வர் அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற மேலைக்கு மறுபடியும் உறுப்பினராகும் நிலை ஏற்படக் கூடும். அப்படி உறுப்பினராக ஆகிவிட்டால் திமுகவின் தயவுடன் மத்திய அமைச்சரவையில் அன்புமணி மறுபடியும் அமைச்சராக முடியும் என்று பாமக ஆசைப்படுகிறது. அதோடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தயவுடன் 25 இடங்களைப் பிடித்து விடலாம் என்றும் அந்தக் கட்சி காய்களை நகர்த்துகிறது. என்றாலும் அரசியல் நிலைமை முன்புபோல் இல்லை என்பதை பாமக உணர்ந்து கொண்டுள்ளது என்று கவனிப்பாளர்கள் சொல்கிறார்கள். தனக்குத் தேவையான வற்றை பாமக மிகவும் தாழ்மையுடன் கேட்டுத்தான் பெறவேண்டுமே தவிர முன்புபோல் அதட்டி உருட்டிப் பெற முடியாது என்பதை அந்தக் கட்சியின் உயர் நிலைத் தலைவர்களுக்கு இப்போதைய அரசியல் நிலவரங்கள் உணர்த்தி வருகின்றன. இதை அந்த கட்சியின் தலைவர்களும் புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதையே வன்னியர் சங்கத் தலைவரான காடு வெட்டி குருவின் இப்போதைய அணுகுமுறை காட்டுகிறது என்று கூறப்படுகிறது.

0 comments: