Friday 14 May 2010

நடிகை குஷ்பு தி.மு.க.வில் சேருகிறார்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நடிகை குஷ்பு அரசியலில் ஈடுபடப்போவதாக சமீபத்தில் அறிவித்தார். குடும்பத்தினர் காங்கிரசில் இருந்தனர் என்றும் சிறு வயதில் தனது படுக்கை அறையில் ராஜீவ் காந்தி படங்கள் இருந்தன என்றும் கூறினார்.
இதையடுத்து குஷ்பு காங்கிரசில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், டி. சுதர்சனம் போன்றோரும் குஷ்புவை காங்கிரஸ் கட்சிக்கு அழைத்து பேட்டிகள் கொடுத்தனர்.
ஆனால் திடீரென்று தி.மு.க.வில் சேர குஷ்பு முடிவு செய்துள்ளார் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்துக்கு செல்கிறார். அங்கு முதல்- அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைகிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன அப்போது தி.மு.க. உறுப்பினர் அட்டையையும் பெற்றுக்கொள்கிறார்.
சட்டமன்ற மேல் சபையில் குஷ்புக்கு எம்.எல்.சி. பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது.
குஷ்பு தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, சத்யராஜ், கார்த்திக் உள்பட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். நாட்டாமை, பாண்டியன், அண்ணாமலை, சிங்கார வேலன், வருஷம் 16, முறைமாமன் போன்றவை குஷ்புவின் ஹிட் படங்களில் சில.
குஷ்புக்கு தமிழ் ரசிகர்கள் கோவில் கட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2005-ல் திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் பற்றி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் பெண்கள் அமைப்பினர் நாடெங்கும் குஷ்பு கொடும்பாவி எரித்து எதிர்ப்பை வெளியிட்டனர். வழக்குகளும் தொடரப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு குஷ்புக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது குஷ்பு கருத்து தவறானது அல்ல என்று நீதிபதிகள் கூறினர். இதை தொடர்ந்து அரசியலில் ஈடுபடும் முடிவை எடுத்து தி.மு.க.வில் இணைகிறார்.

0 comments: