Sunday 16 May 2010

திமுக, அதிமுக அரசியல் விளையாட்டில் குஷ்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ்நாட்டிற்குத் திரைப்படங்களில் நடிக்க வந்து, ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்குப் பிரபலமாகி பின்னர் மக்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிய நடிகை குஷ்பு, இப்போது அரசியல் படத்தில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.
“அரசியல் படத்திலும் குஷ்புவைக் (39) கதாநாயகி ஆக்குவோம்,” என்று முந்திக்கொண்டு சூளுரைத்து அந்த நடிகையைத் திமுக, தன் பக்கம் சேர்த்துக்கொண்டு இருக்கிறது.
முறைப்படி கட்சியில் ஐக்கியமான குஷ்புவுக்குத் திமுக முதல் மரியாதை செலுத்தி கவுரவித்துள்ளது.
நாடாளுமன்ற மேலவையில் அல்லது சட்டமன்ற மேலவையில் திமுக உறுப்பினராக குஷ்பு இடம் பெறப் போகிறார் என்று வலுவாகச் செய்தி அடிபடுகிறது. அதிரடி செய்தியிலும் வெளியிட்டு இருந்தோம்

குஷ்புவைத் தன் பக்கம் இழுத்ததன் மூலம், திமுக ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்து இருக்கிறது என்று அரசியல் கவனிப்பாளர்கள் சொல்கிறார்கள்.
தமிழ்த் திரைப்பட இயக்குர் சுந்தர்.சியைத் மணம் முடித்து, இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயாகி இருக்கும் திருமதி குஷ்பு, திமுகவின் கலைஞர் டிவிக்குப் போட்டியாக இருக்கும் அதிமுகவின் ஜெயா டிவியில் ஜாக்பாட் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
அந்த நிகழ்ச்சி மூலம் ஜெயா டிவியும் குஷ்புவும் மக்களிடம் மிகவும் பிரபலமாகி இருக்கிறார்கள்.
“தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் அடுத்த முதல்வர் என்று கூறப்படும் துணை முதல்வர் முக ஸ்டாலினை எதிர்த்து நடிகை குஷ்புவை களம் இறக்க அதிமுக தரப்பில் ஒரு யோசனை பரிசீலிக்கப்பட்டு வந்தது.
“ஆனால் குஷ்புவைச் சேர்த்துக் கொண்டு அதிமுகவின் அந்த வியூகத்தை திமுக உடைத்துவிட்டது. அதே வேளையில் ஜெயா டிவி பிரபலத்தையும் அமுக்கிவிடுவது திமுகவின் திட்டம்,” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.
“பெண்களுக்குத் தொண்டாற்றப் போகிறேன். திமுக கருத்து சுதந்திரமிக்க கட்சி,” என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
“முற்போக்குச் சிந்தனை உள்ளவர் குஷ்பு,” என்று சொல்லி திமுக தலைவர் கருணாநிதி அவரை வரவேற்றுள்ளார்.
கற்பு பற்றி பேசி ஏற்கனவே பல பிரச்சினைகளில் சிக்கி தப்பி இருக்கும் இந்த நடிகை, திமுக-அதிமுக அரசியல் விளையாட்டில் இப்போது  ஒரு பகடைக்காயாக சிக்கி இருக்கிறார். இதையும் சமாளித்து அரசியலிலும் கதாநாயகியாக குஷ்பு மிளிர்வாரா என்பதைக் கணிக்க, நிலவரங்கள் இப்போது தெளிவாக இல்லை

0 comments: