இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
மாதவரம் 200 அடி ரோட்டில் நேற்றிரவு பைக்கில் சென்ற திமுக பிரமுகரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. தொழில் போட்டி காரணமாக இந்தக் கொலை நடந்ததா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளை தேடி வருகின்றனர். சென்னையை அடுத்த மாதவரம் நேரு நகரில் வசித்து வந்தவர் நாராயணமூர்த்தி (34). திருமணமாகவில்லை. திருவள்ளூர் மாவட்ட திமுக பிரதிநிதியான இவர், மாதவரம் 200 அடி ரோட்டில் கணேஷ் ரத்னா என்ற பெயரில் வாகன வாட்டர் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். கடையில் இருந்த நாராயணமூர்த்தியை பார்க்க அவரது நண்பர் தாமோதரன் நேற்று வந்திருந்தார். இரவு 10 மணிக்கு இருவரும் தனித்தனி பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர். 200 அடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது நடுரோட்டில் திடீரென லாரி ஒன்று குறுக்கே சென்றது. சுதாரித்துக் கொண்ட நாராயணமூர்த்தி, பைக்கை நிறுத்தினார். அந்த நேரத்தில் ரோட்டோர புதரில் பதுங்கியிருந்த 4 பேர் பயங்கர ஆயுதங்களுடன் திபுதிபுவென ஓடிவந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் நாராயணமூர்த்தியை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். இந்த கொடூர காட்சியை பார்த்த தாமோதரன், அதிர்ச்சியில் பைக்கை போட்டுவிட்டு ஓடிச் சென்று ஒளிந்தார். ரத்த வெள்ளத்தில் நாராயணமூர்த்தி சரிந்து விழுந்ததும் கொலை கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
அவர்கள் சென்றபிறகு தாமோதரன் ஓடிவந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாராயணமூர்த்தியை ஆட்டோவில் ஏற்றி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு நாராயணமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் மாதவரம் இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் விரைந்து வந்து, நாராயணமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். நடந்த சம்பவம் குறித்து தாமோதரனிடம் விசாரித்தனர்.
போலீசார் வழக்கு பதிந்து, தொழில் போட்டி காரணமாக இந்தக் கொலை நடந்ததா? அல்லது அரசியல் பின்னணி உள்ளதா என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 comments:
Post a Comment