Tuesday, 13 April 2010

மு.க.அழகிரி அமைச்சர் பதவியிலிருந்து விரைவில் விலகல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது பதவியை விரைவில் ராஜினாமா செய்து விட்டு மாநில அரசியலுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான அழகிரியின் தொடர் கோரிக்கையை முதல்வர் கருணாநிதி ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மே மாதம் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் முதல்வர் கருணாநிதி டெல்லிக்குப் பயணம் மேற்கொள்கிறார் என்று கூறப்படுகிறது. திட்டக் கமிஷன் கூட்டத்திற்காக அவர் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அழகிரி விவகாரம் தொடர்பாகவும், தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் விவாதிக்க இந்தப் பயணத்தை முதல்வர் பயன்படுத்தவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மே 6ம் தேதி மாலை டெல்லி வருவார் கருணாநிதி என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நாள் அவர் முதலில் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசுகிறார். பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்திக்கவுள்ளார். திமுகவில் தற்போது வாரிசுப் போர் உக்கிரமடைந்துள்ளது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த கட்டத்திற்கு உயருவது அவ்வளவு எளிதாக இருக்காது என்று கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தால் நிச்சயம் நான் போட்டியிடுவேன். எனது உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் மு.க.அழகிரி. அழகிரி- ஸ்டாலின் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் முதல்வர் கருணாநிதி தவித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சோனியாவிடம் சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கவுள்ளதாக தெரிகிறது. அதன்படி, மு.க.அழகிரியை மீண்டும் மாநில அரசியலுக்குக் கொண்டு வருவது. அவருடைய அமைச்சர் பதவியில் கனிமொழியை அமர வைப்பது, சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே, இந்த ஆண்டு இறுதியில் நடத்துவது என்பது குறித்து சோனியாவுடன் கருணாநிதி ஆலோசிக்கவுள்ளதாக தெரிகிறது. லோக்சபாத் தேர்தல் முடிந்து அமைச்சரவை உருவாக்கத்தின்போதே கனிமொழிக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அழகிரிக்கு அமைச்சர் பதவியை கேட்டதால் கனிமொழிக்கு இடம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. தற்போது அழகிரி மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகினால் அவருடைய பதவியை கனிமொழிக்குத் தர காங்கிரஸுக்குச் சிரம்ம் இருக்காது என்று கூறப்படுகிறது. நடப்பு சட்டசபையின் ஆயுள் காலம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை உள்ளது. ஆனால் தற்போது திமுகவில் நிலவும் பூசல் காரணமாக முன்கூட்டியே தேர்தலை நடத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முதல்வர் விரும்புவதாக தெரிகிறது. இதுகுறித்த காங்கிரஸ் தலைவரின் கருத்தை அறிய கருணாநிதி ஆவலாக உள்ளாரம். முன்கூட்டிய தேர்தலுக்கு சோனியா ஒப்புக் கொண்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி பல முக்கியமான விவகாரங்களின் பின்னணியில், முதல்வர் டெல்லிக்குச் செல்லவிருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை திமுக வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

0 comments: