இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கத்தாருக்கு வேலைக்காக செல்ல சென்னை விமானநிலையம் வந்த ஆந்திர வாலிபருக்கு தெலுங்கு தவிர வேறு எந்த மொழியும் தெரியாததால் ஒன்றரை மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். ஆந்திரா மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் ஜெய்குமார் (28). கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் கூலி வேலைக்கு செல்வதற்காக, நேற்று சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தார். அதிகாலை 4.30 மணிக்கு கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்ல டிக்கெட் வாங்கியிருந்தார். படிப்பறிவு இல்லாத ஜெய்குமார், விமானத்தில் பயணம் செய்ய வருவது இதுவே முதல் முறை. தனியாக வந்த அவருக்கு எங்கு முதலில் செல்ல வேண்டும், எப்படி செல்ல வேண்டும் என்று தெரியவில்லை.
எப்படியோ தட்டுத்தடுமாறி போர்டிங் பாஸ் வாங்கி, பொருட்களை பாதுகாப்பு சோதனைக்கு அனுப்பிவிட்டு, குடியுரிமை பிரிவுக்கு சென்று விட்டார். அங்கு, ஜெய்குமாரின் பாஸ்போர்ட், விசாவை அதிகாரிகள் பரிசோதித்து விமானத்தில் ஏற அனுப்பி வைத்தனர். விமானத்தில் ஏற முதல் தளத்துக்கு சென்று இடதுபுறமாக திரும்ப வேண்டும். ஆனால், ஜெய்குமாருக்கு இது தெரியாததால் வலதுபுறமாக சென்று விட்டார். அங்கு, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான குடியிரிமை சோதனை நடத்தப்படும். விமானத்திலிருந்து இறங்கி வந்த பயணிகள் சிலர் அங்கு வரிசையில் நின்றிருந்தனர்.
அவர்களும் தன்னுடன் விமானத்தில் ஏற வந்தவர்கள் என நினைத்து, ஜெய்குமாரும் வரிசையில் நின்றார். அங்கிருந்த குடியுரிமை அதிகாரிகள், ஜெய்குமாரின் பாஸ்போர்ட்டை சரியாக கவனிக்காமல், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி விட்டதாக முத்திரை குத்தி அனுப்பினர். ஜெய்குமார் மற்ற பயணிகளுடன் மீண்டும் விமான நிலையத்துக்கு வெளியில் வந்துவிட்டார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் “விமானத்தில் ஏற எப்படி செல்ல வேண்டும்?” என்று கேட்டுக் கொண்டே, உள்நாட்டு விமான நிலையத்துக்குள் நுழைந்துள்ளார்.
அங்கிருந்த மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் விசாரித்துள்ளனர். தோகா செல்ல வேண்டுமென ஜெய்குமார் கூறியதால், அவரை பன்னாட்டு விமான நிலையத்துக்கு செல்லுமாறு கூறினர். அவர் பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகள் வெளியில் வரும் பாதைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த போலீசார், புறப்பாடு பகுதிக்கு செல்லுமாறு கூறி இங்கும் அங்கு மாக அலைக்கழிக்கப் பட்டதால் விமான நிலையத்திலேயே ஒன்றரை மணி நேரம் சுற்றியிருக்கிறார். அவருக்கு தெலுங்கு தவிர வேறெந்த மொழியும் தெரியாது. இதனால் பயணிகளிடமும் விசாரிக்க முடியவில்லை. இறுதியாக, அவர் மீண்டும் பன்னாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதிக்கு வந்து, தோகா செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் ஜெய்குமாரின் பாஸ்போர்ட்டை வாங்கிப் பார்த்தனர். அதில் முத்திரை குத்தப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களிடம் அழைத்துச் சென்றனர். ஜெய்குமாரைப் பார்த்ததும் ஊழியர்கள், “போர்டிங் பாஸ் வாங்கிக் கொண்டு எங்கு போனீர்கள். உங்கள் பெயரை ஒலிபெருக்கியில் அறிவித்தோம். கேட்கவில்லையா. உங்களுக்காக 10 நிமிடம் காத்திருந்து விட்டு, இப்போதுதான் விமானம் புறப்பட்டுச் செல்கிறது” என்று எரிச்சலுடன் கூறினர். குடியுரிமை அதிகாரிகளிடம் கேட்டதற்கு கவனிக்காமல் பாஸ்போர்ட்டில் முத்திரை குத்தி விட்டனர்.
இந்த விவரத்தை எல்லாம் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் மிகவும் கஷ்டப்பட்டு ஜெயக்குமாருக்கு புரிய வைத்தனர். விஷயத்தை கேள்விப்பட்டவுடன் ஜெய்குமார், கதறி அழ ஆரம்பித்து விட்டார். “தோகா சென்று வேலை செய்வதற்காக, கஷ்டப்பட்டு பணம் சேர்த்து விமான டிக்கெட் எடுத்தேன். விமானத்தை தவற விட்டுவிட்டேனே” என்று புலம்பினார்.
இன்று காலை 4.30 மணிக்கு செல்லும் விமானத்தில் ஏற்றி தோகா செல்ல ஏற்பாடு செய்வதாக கூறி குடியுரிமை அதிகாரிகளும், கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களும் சமா தானப்படுத்தினர்.
Saturday, 27 March 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment