Wednesday, 31 March 2010

பிடிபட்ட அமெரிக்கர்களை பழிவாங்குவோம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முக்கிய காரணகர்த்தா என்று கருதப்படும் கலீத் ஷேக் முகம்மது என்ற பாகிஸ்தானியருக்கு அமெரிக்கா, மரண தண்டனை விதித்தால் அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று ஒசாமா பின் லாடன் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பான ஒலிநாடா செய்தியை அல் ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
“கலீத் ஷேக் முகம்மது உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டால், எங்களிடம் பிடிபட்டுள்ள அமெரிக்கர்களுக்கு நாங்கள் மரண தண்டனையை நிறைவேற்றுவோம்,” என்று ஒசாமா பின் லாடன் அந்த செய்தியில் மிரட்டியுள்ளார்.
“ அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் அதிபர் புஷ்ஷின் வழியைப் பின்பற்றி நடக்கிறார். எங்களுக்கு எதிராக அநீதி இழைப்பதை, வெள்ளை மாளிகையில் இருப்பவர்கள் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக, பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலை அவர்கள் தொடர்ந்து ஆதரிக்கின்றனர்,” என்றும் பின் லாடன் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஒலிப்பதிவு எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை என்ற போதிலும் அது உண்மையாக பதிவு செய்யப்பட்டதுதான் என்று தாங்கள் கருதுவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவை கதிகலங்கச் செய்த அந்தத் தாக்குதல் தொடர்பில் கலீத் ஷேக் முகம்மதுவும் மேலும் நான்கு சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்பட்டு நியூயார்க்கில் விசாரணையை எதிர்நோக்குகின்றனர்.
நியூயார்க்கில் அந்த விசாரணை மேற்கொள்ளப்படவிருப்பதை பலர் குறை கூறி வருகின்றனர். நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட இடத்திற்கு அருகே இந்த விசாரணையை மேற்கொள்வதால் இடையூறாக இருக்கும் என்று பலர் கருதுகின்றனர்.
அந்த ஐவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிடவுள்ளனர்.
நியூயார்க், வாஷிங்டனில் நடந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்ததை கலீத் ஷேக் முகம்மது ஒப்புக்கொண்டுள்ளதாக பென்டகன் கூறுகிறது.
கலீத் ஷேக் முகம்மது 2003-ம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, அல் காய்தா புதிய சதித் திட்டத்தை தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண் தீவிரவாதிகளின் மார்புப் பகுதியில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் குண்டுகளை மறைத்து வைத்து விமானங்களில் தாக்குதல் நடத்தச் செய்வது அவர்களின் திட்டம் என்று கூறப்படுகிறது.

0 comments: