Tuesday, 9 February 2010

சென்னையில் பிரபல ரவுடிகள் சுட்டுக்கொலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னையில் போலீசாருடன் நடந்த மோதலில் பிரபல ரவுடி திண்டுக்கல் பாண்டியும் அவனது கூட்டாளியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்தவன் பாண்டி. இவன் மீது 10 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு, 2 வெடிகுண்டு வழக்கு உட்பட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பயங்கர ரவுடியான திண்டுக்கல் பாண்டி, கடைசியாக கே.கே.நகரில் திவாகர் என்பவரை கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் தேடப்பட்டு வந்தான். ஏற்கனவே 2 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவன். எப்போதும் துப்பாக்கி வைத்திருப்பான். பாண்டியை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் நந்தக்குமார், மகேந்திரன், எஸ்.ஐ.க்கள் ரவிக்குமார், மகேஷ்குமார் உட்பட 12 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களாக நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, கோவை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் பாண்டியை தனிப்படையினர் தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு ஈரோடு திண்டல் என்ற இடத்தில் பாண்டி பதுங்கி இருப்பதாக தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சுற்றி வளைத்தபோது பாண்டியும் அவனது கூட்டாளி கூடுவாஞ்சேரி வேலுவும் ஸ்கார்பியோ காரில் தப்பினர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். தப்பி ஓடிய இருவரும் நேற்று பிற்பகல், சென்னையை அடுத்த நீலாங்கரையில் சென்றுகொண்டிருப்பதாக தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. அதனால், தனிப்படையினர், கிழக்குக் கடற்கரை சாலையில் விஜிபி கோல்டன் பீச் அருகே காத்திருந்தனர். பிற்பகல் 3.15 மணிக்கு பாண்டியின் கார் செல்வதைப் பார்த்ததும் போலீசார் விரட்டினர். போலீசாரை பார்த்த பாண்டி, பனையூர் 10வது அவென்யூவில் காரை திருப்பினான். போலீசார் காரில் விரட்டிச் சென்று மறித்தனர். போலீசாரின் கார் மீது பாண்டியின் கார் மோதியது. உடனே, காரை ஓட்டி வந்த வேலுவிடம், ‘அவங்கள வெட்டுடா’ என்று பாண்டி கத்தினான். காரில் இருந்து இறங்கிய போலீசார், இருவரையும் பிடிக்க முயன்றனர். பயங்கர கத்தியால் வேலு வெட்டியதில் ஏட்டு பிரேம்குமாரின் கையில் வெட்டு விழுந்தது. எஸ்.ஐ.க்கள் மகேஷ்குமார், ரவிக்குமார் ஆகியோரையும் வேலு வெட்டினான். இன்ஸ்பெக்டர் நந்தக்குமார், ‘‘ஒழுங்காக சரணடைந்துவிடுங்கள்’’ என்று எச்சரித்தார். பாண்டி தன்னிடம் இருந்த இத்தாலி நாட்டு துப்பாக்கியால் போலீசாரை நோக்கி 3 முறை சுட்டான். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் நாட்டு வெடிகுண்டை வீசினான். அது சுமோவில் பட்டு வெடித்தது. இதிலும் யாருக்கும் காயம் இல்லை. மற்றொரு குண்டு வெடிக்காமல் கீழே விழுந்தது. இன்ஸ்பெக்டர் நந்தக்குமார், மகேந்திரன் ஆகியோர் பாண்டி, வேலு இருவரையும் சுட்டுத் தள்ளினர். பின்னர் 108க்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். காயமடைந்த போலீசாரையும் ரவுடிகளையும் ஏற்றிக் கொண்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரவுடிகள் இருவரும் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். போலீசார் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரவுடிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. தகவல் கிடைத்ததும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர் சக்திவேல், துணை கமிஷனர்கள் பெரியய்யா, திருஞானம் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆர்டிஓ செந்தில்குமார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தாலி ரக துப்பாக்கி, கத்தி, ஒரு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டன.

0 comments: