இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் அன்பு (56). கேபிள் டிவி நடத்தி வந்தார். இவரது மனைவி வேளாங்கண்ணி. ராஜேஷ் என்ற மகனும், கவிதா, அனிதா என்ற மகள்களும் உள்ளனர்.
தற்போது, இதே பகுதியில் புதிதாக குடியேறியவர்களுக்கு அன்பு கேபிள் டிவி இணைப்பு கொடுத்துள்ளார். இதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் ஆத்திரம் அடைந்தனர். ‘புதிய வீடுகளுக்கு நாங்கள் இணைப்பு கொடுக்க இருந்தோம். நீ எப்படி கொடுக்கலாம்’ என்று கேட்டு தகராறு செய்துள்ளனர். கேபிள் வயர்களையும் அறுத்து எறிந்தனர். மின் இணைப்பு கொடுப்பதிலும் இவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்தது. இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசில் அன்பு புகார் செய்தார். செல்வம் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் அழைத்து விசாரித்து எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில், நேற்றிரவு வீட்டுக்கு வெளியே அன்பு பேசிக் கொண்டிருந்தார். ஆட்டோவில் வந்த 7 பேர், பயங்கர ஆயுதங்களுடன் அன்புவை நோக்கி ஓடி வந்தனர். மிரண்டுபோன அன்பு, அலறியடித்து ஓடினார். துரத்திச் சென்ற கும்பல், மீன் மார்க்கெட் அருகே அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. பின்னர் அவர்கள் ஆட்டோவில் ஏறி தப்பிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அன்புவை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்து பார்த்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
தகவல் அறிந்த துரைப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதமன், எஸ்ஐ சிவகுமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அன்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக கண்ணகி நகரைச் சேர்ந்த செல்வம், டூமா (எ) சதீஷ், சரோஜா, தொத்துவாய் சரவணன், நொண்டி கணேசன், அரசு, சுந்தர், ஸ்டீபன் ஆகியோர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து சரோஜாவை கைது செய்தனர்.
தப்பி ஓடியவர்களை பிடிக்க அடையாறு துணை கமிஷனர் திருஞானம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கண்ணகிநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Monday, 8 February 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment