Wednesday, 10 February 2010

போலீஸாரால் சுட்டிக் கொல்லப்பட்ட ரவுடியின் ரூ.4 கோடி பணம் மாயம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட திண்டுக்கல் பாண்டியின் கூட்டாளிகள் 6 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாண்டியிடம் இருந்த ரூ.4 கோடி மாயமானதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தமிழகத்தை கலக்கி வந்த பிரபல ரவுடி திண்டுக்கல் பாண்டி, அவனது கூட்டாளி வேலு இருவரும் சென்னை அருகே நேற்று போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரவுடியாக அவதாரம் எடுத்த பாண்டி, 1995&ல் வெற்றி என்ற ரியல் எஸ்டேட் உரிமையாளரை வெட்டிக் கொன்றான். அதன்பின் தனது சகோதரன் நாகராஜ் கொலைக்கு பழிக்குப் பழியாக திண்டுக்கல்லில் சிஸர் மணி, கரடி மணி ஆகியோரை வெட்டிக் கொன்ற வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்டான். அதைத் தொடர்ந்து 7 கொலை வழக்குகளில் இவனது தொடர்பு இருப்பது தெரியவந்தது. கூலிப்படையை அனுப்பிதான் கொலை செய்வான். சம்பவம் நடக்கும் இடத்தில்கூட இருக்க மாட்டான். திட்டம் போட்டுக் கொடுத்துவிட்டு, வெளியூர் எங்காவது சென்றுவிடுவான். பாண்டிக்கு கார் ஓட்டத் தெரியாது. அதனால் டிரைவிங் தெரிந்த ஒருவரை தன்னுடன் எப்போதும் வைத்திருப்பான். கொலை, ஆள்கடத்தல் வழக்குகளில் கூலிப்படையாக செயல்பட்டு வந்தான். போலீஸ் வேட்டை தீவிரமானால், வேறு யாரையாவது சரணடைய வைத்துவிட்டு தப்பிவிடுவான். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கோ, முக்கிய பிரமுகர்களுக்கோ நிலம் தேவைப்பட்டால் பாண்டியைத்தான் அணுகுவார்கள். நிலத்தின் உரிமையாளரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று மிரட்டுவான். நிலத்தை அடிமாட்டு விலைக்கு எழுதி வாங்கிக் கொள்வான். இதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் கமிஷன் வாங்குவான். நாகர்கோவிலைச் சேர்ந்த மோகன்ராம் என்பவன்தான் பாண்டியின் வலதுகரமாக செயல்பட்டு வந்தான். நடு மண்டையில் அரிவாளால் வெட்டி கொலை செய்வதுதான் மோகன்ராமின் வழக்கம். அந்த பாணியில் கொலை நடந்தால் அதை செய்தது மோகன்ராம்தான் என்றும், திண்டுக்கல் பாண்டிக்கு தொடர்பு உண்டு என்றும் போலீசார் முடிவு செய்துவிடுவார்கள். பாண்டியுடன் பிரச்னை ஏற்பட்டதால் மோகன்ராம் தனியாக பிரிந்து சென்றுவிட்டான். தற்போது பாண்டியின் கூட்டத்தில் ஐயப்பன், காட்டையன் (எ) செந்தில்குமார், சம்பத், பிச்சை, சிலோன் மோகன் உள்பட 6 பேர் உள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்களை சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களில் சிலோன் மோகன், பிரபல விபசார புரோக்கர் கன்னட பிரசாத்தின் கூட்டாளி. ரவுடிகளுக்கு சிலோன் மோகன்தான் நடிகைகளை சப்ளை செய்வான். அதன் மூலம் சினிமா வட்டாரத்திலும் தனது கைவரிசையை பாண்டி காட்டத் தொடங்கினான். உயிருக்கு பயந்து நடிகர்கள் யாரும் போலீசில் புகார் செய்யவில்லை. நடிகர்களுக்குள் உள்ள நிலப் பிரச்னையில் கண்டிப்பாக இவனுடைய தலையீடு இருக்கும். வடிவேலு, சிங்கமுத்து பிரச்னையிலும் அரசியல் பிரமுகரோடு, திண்டுக்கல் பாண்டியும் பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல்வாதி போல வெள்ளை உடையில் வலம் வந்த பாண்டி, வீட்டுக்கு செல்வதில்லை. இரு மனைவிகளுக்கும் போன் செய்து எங்காவது வரவழைப்பான். அவர்களுக்கு பணத்தை கொடுத்துவிட்டு, காரிலேயே சுற்றிக் கொண்டிருப்பான். வாரத்துக்கு ஒரு முறை செல்போனை மாற்றுவான். கட்டப் பஞ்சாயத்து மூலம் கிடைக்கும் பணத்தை காரிலேயேதான் வைத்திருப்பான். அவனிடம் குறைந்தது 3 முதல் 4 கோடி ரூபாய் வரை இருந்திருக்கும் என கூறப்படுகிறது. நேற்று என்கவுன்டர் நடந்தபோது அவன் காரில் பணம் இல்லை. போலீஸ் தன்னை நெருங்குவது தெரிந்ததும் பணத்தை எங்கோ பதுக்கிவிட்டான் என தெரிகிறது. பணத்தை யாரிடம் கொடுத்து வைத்துள்ளான், அது மாயமானது எப்படி என்று போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதற்கிடையே பாண்டி, வேலு இருவரின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. பாண்டியின் மனைவி மற்றும் உறவினர்கள் வத்தலகுண்டில் இருந்து சென்னை வந்துள்ளனர். வேலுவுக்கு திருமணமாகாததால் அவரது பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது.

0 comments: