Wednesday, 16 September 2009

நீரில் மூழ்கி ஐந்து பேர் பலி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நள்ளிரவில் திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியானார்கள். பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மேலும் பலரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள ஒரு திரையரங்கத்திற்கு பின் பக்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்புகள் உள்ளன. . அதனையொட்டி காட்டாறு ஒன்று ஓடுகிறது. அந்த ஆற்றில் வரும் வெள்ளம் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடி பாலாற்றில் கலக்கிறது. அந்த காட்டாற்றின் இருபுறங்களிலும் பலர் குடிசைகள் போட்டு வசித்து வருகின்றனர். அந்த ஓரத்தில் உள்ள அலாவுதீன் நகர், பன்னீர்செல்வம் நகர், பிலால் நகர் ஆகியவற்றை சேர்ந்த 250 குடிசைகள் காட்டாற்றின் ஓரத்தில் உள்ளன. நேற்றிரவு ஆம்பூரில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஆம்பூரை அடுத்துள்ள மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் அருவி போல கொட்டி அது இந்த காட்டாற்றில் வந்து கலந்தது. மேலும் ஆசனமடுகு பகுதியில் இருந்தும் பெருமளவு தண்ணீர் காட்டாற்றில் வந்ததால், அதில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பலத்த மழை, இடி, மின்னல், காற்று ஆகியவை இருந்ததால் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. இதனால் திடீரென காட்டாற்றில் வெள்ளம் வந்த விஷயம் குடிசை பகுதிகளில் வசித்த மக்களுக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக கரையோரத்தில் இருந்த பல குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன. இன்று காலை காட்டாற்று வெள்ளம் பாலாற்றில் கலக்கும் இடத்தில் அமானுல்லா என்பவரின் மனைவி முன்னி (வயது 25), மகள் ஷானு (வயது 6), மகன் அக்பர் (வயது 3), கலிலுல்லா என்பவரின் மகன் இனயத்துல்லா (வயது 16) ஆகியோரின் பிணங்கள் ஒதுங்கி கிடந்ததை மக்கள் பார்த்தனர். அமானுல்லா உடலை காணவில்லை. வெள்ளம் வடிய வடிய அதிகாரிகள் தீவிரமாக அமானுல்லாவின் உடலை தேடி வருகின்றனர். இதனிடையே அடையாளம் தெரியாத ஒருவரின் பிணமும் கிடந்தது. மேலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மேலும் பலரை காணவில்லை என்று கூறப்படுகிறது. தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டன. பாதிக்கப்பட்ட குடிசைப்பகுதி மக்கள் அருகிலுள்ள மகரும்உலும் என்னும் மேனிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் அங்கு தங்கியிருக்கும் மக்களின் குடும்ப வாரிய கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு முடிந்தால் தான் மேலும் எத்தனை பேரை காணவில்லை என்பது தெரிய வரும். காட்டாற்றின் இருபகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. ஆம்பூரில் திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் 5 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் கிடைத்ததும் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரன், மாவட்ட காவல் துறை அதிகாரி அறிவுச் செல்வன், ஆம்பூர் டிஎஸ்பி பன்னீர் செல்வம் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணியை பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கலெக்டர் ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரண உதவி அளிக்க உத்தரவிட்டார்.

0 comments: