இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னையில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களுடன் மும்பை நடன அழகிகள் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட கள்ள நோட்டுக்களை இவர்கள் புழக்கத்தில் விட்டுள்ளனர். மாவோ தீவிரவாதிகளோடு இவர்களுக்கு தொடர்புள்ளதா? என்று விசாரணை நடந்து வருகிறது.
இணை கமிஷனர் பேட்டி
தென் சென்னை இணை போலீஸ் கமிஷனர் சக்திவேல் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை தியாகராய நகரில் கள்ள நோட்டு கும்பலின் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. கமிஷனர் ராஜேந்திரன் இது தொடர்பாக தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டார். அவரது அறிவுரையின் பேரில் துணை கமிஷனர் சம்பத்குமார், உதவி கமிஷனர் கண்ணபிரான் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனி போலீஸ் படையினர் களத்தில் இறக்கப்பட்டனர்.
தியாகராய ரோட்டில் பிளாட்பார கடை வைத்துள்ள வியாபாரி ஒருவர் தன்னிடம் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து 150 ரூபாய்க்கு பொருட்களை வாங்கிக் கொண்டு மீதி 850 ரூபாயை நல்ல நோட்டுகளாக மாற்றி விட்டனர். அவர்கள் தற்போது அருகிலேயே உட்கார்ந்திருப்பதாக போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
மடக்கி பிடித்தனர்
உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்று ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை மாற்றிய முகமது ஜாகீர் உசேன் (வயது 25) என்பவரையும், முகமது ராஜுசேக் (19) என்பவரையும் மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து 16 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் விசாரித்ததில் பெரியமேட்டில் உள்ள விடுதி ஒன்றில் 2 பெண்கள் உள்பட மேலும் 3 பேர் கொண்ட கள்ள நோட்டு கும்பல் தங்கியிருக்கும் தகவல் கிடைத்தது.
நடன அழகிகள்
உடனே குறிப்பிட்ட விடுதியில் தனிப்படை போலீசார் சோதனை போட்டபோது, அங்கு தங்கியிருந்த கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த அல்கா ஷேக் (32), லோத்தா (25), ருக்ஷானா (35) ஆகிய 3 பேரும் பிடிபட்டனர். அவர்களிடமும் ஏராளமான ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
மொத்தம் 92 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளும், 3 செல்போன்களும் உண்மையான ரூபாய் நோட்டுகள் ரூ.5 ஆயிரத்து 565-ம் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பைகள் நிறைய சோப்பு, வளையல், கண்ணாடி மற்றும் அழகு சாதன பொருட்கள், துணிமணிகள், கவரிங் நகைகள் போன்ற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவை கள்ள நோட்டுகள் மூலம் வாங்கியது என்பது தெரியவந்தது.
பிடிபட்டவர்களில் ருக்ஷானா என்ற பெண் மட்டும் கொல்கத்தாவை சேர்ந்தவர். மற்றவர்கள் அனைவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். கைதான பெண்கள் இருவரும் மும்பை மது பார்களில் நடனமாடியவர்கள் ஆவார்கள்.
தினமும் ஆயிரம் கூலி
கள்ள நோட்டு கும்பல் இந்த நடன அழகிகளுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் கூலி கொடுத்து அழைத்து வந்துள்ளனர். கள்ள நோட்டுகளை மாற்றப் போகும் போது சந்தேகம் வராமல் இருக்க இந்த அழகிகளை தங்கள் மனைவிகள் போல கள்ள நோட்டு கும்பல் அழைத்து வந்துள்ளனர்.
புதுமையான முறையில் கள்ள நோட்டுக்களை மாற்றுவதற்கு இந்த யுக்தியை கையாண்டுள்ளனர். பெங்களூர், மும்பை ஆகிய இடங்களில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டு விட்டு சென்னை வந்த போது இவர்கள் மாட்டிக் கொண்டனர்.
கள்ள நோட்டுகளுக்கு மாற்றிய நல்ல ரூபாய் தாள்கள் ரூ.50 ஆயிரத்தை ஆன்லைன் வங்கி கணக்கு மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் ரெயில் மூலம் சென்னை வந்துள்ளார்கள்.
இந்த கள்ள நோட்டுகள் எங்கு அச்சடிக்கப்பட்டது? இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்? என்பது பற்றியெல்லாம் விசாரணை நடந்து வருகிறது.
கைதேர்ந்த தொழில்நுட்பம்
ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் அசல் நோட்டுகளை போலவே உள்ளன. காந்தி படம் கூட நல்ல நோட்டுகளில் உள்ளதை போன்றே அச்சடித்துள்ளனர். மிகவும் கைதேர்ந்த தொழில்நுட்பத்தில் இந்த கள்ள நோட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு இணை கமிஷனர் சக்திவேல் தெரிவித்தார்.
பேட்டியின் போது உதவி கமிஷனர் கண்ணபிரான் உடன் இருந்தார். கைப்பற்றப்பட்ட ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களை இணை கமிஷனர் சக்திவேல் பார்வையிட்டு நிருபர்களிடம் காண்பித்தார்.
பாகிஸ்தானில் இருந்து…
பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி தலைவலி கொடுப்பதை போல, பல கோடி ரூபாய் கள்ள நோட்டுகளும் பாகிஸ்தானில் அச்சிடப்பட்டு இந்தியாவில் புழக்கத்தில் விடப்படுகிறது. இது இந்திய பொருளாதாரத்தை நசுக்குவதற்காக பாகிஸ்தானின் சதி வேலை என்று சொல்லப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை இந்தியாவில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடுவதாக சொல்லப்படுகிறது.
கள்ள நோட்டுகளை வங்கதேச நாட்டிற்கு கொண்டு வந்து அங்கிருந்து பீகார், ஜார்கண்ட் வழியாக புழக்கத்தில் விடுகிறார்கள். கள்ள நோட்டு ஏஜெண்டுகள் இந்தியா முழுவதும் பரவி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மாவோ தீவிரவாதிகளுக்கும் இந்த கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பல் தலைவன்
தற்போது பிடிபட்டுள்ள கள்ள நோட்டு கும்பல் 4 நாட்களுக்கு முன்புதான் சென்னை வந்துள்ளனர். அவர்களோடு மன்னாரு ஷேக் என்ற கள்ள நோட்டு கும்பல் தலைவனும் வந்துள்ளான். அவன் போலீசாரிடம் சிக்கவில்லை. அவனை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.
கள்ள நோட்டு கும்பல் வங்கியில் வைத்துள்ள கணக்கையும் போலீசார் ஆராய்ந்து பார்த்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது. சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் நேற்று மாம்பலம் போலீஸ் நிலையத்திற்கு வந்து கைதாகியுள்ள கள்ள நோட்டு ஆசாமிகள், நடன அழகிகளிடம் விசாரணை நடத்தினார்கள்.
கள்ள நோட்டு கும்பலின் நெட்ஒர்க்கை கண்டுபிடிக்கவும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Tuesday, 15 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment