இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
புதுடில்லி : கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரன், ஏராளமான அளவில் சொத்துக்களை குவித்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், அவரிடம் விளக்கம் கேட்டுள்ளார். நீதிபதி தினகரனுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதிகளாக பணியாற்றும் ஐந்து பேரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க, தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனை தலைவராகவும், நீதிபதிகள் அகர்வால், கபாடியா, தருண் சட்டர்ஜி, அல்தாமஸ் கபீர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட சுப்ரீம் கோர்ட் தேர்வுக்குழு, பரிந்துரை செய்தது. இவர்களில் ஒருவர், கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரன். தமிழகத்தைச் சேர்ந்த இவர், ஏராளமான அளவில் சொத்துக்களை குவித்துள்ளதாக, சென்னையைச் சேர்ந்த வக்கீல்கள் சிலர், சுப்ரீம் கோர்ட்டின் சீனியர் வக்கீல்களுக்கு கடிதம் அனுப்பினர்.
இதையடுத்து, "நீதித்துறை பொறுப்புக்குழு' என்ற அமைப்பின் சார்பில், வக்கீல்கள் சாந்தி பூஷண், ராம்ஜெத்மலானி, பாலி எஸ்.நாரிமன் மற்றும் அனில் திவான் ஆகியோர் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினர். அதில், "நில மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் நீதிபதி தினகரன் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தினகரனை நியமிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளனர். கடந்த 8ம் தேதி இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது.
விசாரணை: இதைப் பரிசீலித்த தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், கடந்த 11ம் தேதி நீதிபதி தினகரனை அழைத்து புகார் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தினகரன் மறுத்தார். இருந்தாலும், "தினகரனை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்' என, இந்திய பார் கவுன்சில் குரல் கொடுத்தது. அதை ஏற்றுக் கொண்ட மத்திய சட்ட அமைச்சகம், தினகரன் தொடர்பான பைல்களை நிறுத்தி வைத்துள்ளது. அதேநேரத்தில், மற்ற நான்கு ஐகோர்ட் தலைமை நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக்க அனுமதி வழங்கியுள்ளது.
700 ஏக்கர் நிலம்: தினகரன் மீதான புகார் குறித்து மூத்த வக்கீல் சாந்தி பூஷண் கூறியதாவது: நீதிபதி தினகரன் ஏராளமான அளவில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். அவருக்கு எதிராக ஏராளமான புகார்கள் உள்ளன. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து, சென்னை வக்கீல்கள் விரிவான கடிதம் அனுப்பியுள்ளனர். தன் குடும்பத்தினர் மூலம் 700 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார் தினகரன். பண்ணை ஒன்றையும் அமைத்துள்ளார். இதுதவிர வேறு பல ஊழல் குற்றச்சாட்டுக்களும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க தினகரன் பெயரை பரிந்துரை செய்யும் முன், அவருடன் சென்னையில் பணிபுரிந்த, தற்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக உள்ள மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் அசோக்குமார் கங்குலி ஆகியோரிடம் தலைமை நீதிபதி ஆலோசனை கேட்கவில்லை. கலந்து ஆலோசித்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். தமிழகத்தில் நில உச்சவரம்பு சட்டத்தை மீறி, தினகரன் ஏராளமான அளவில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதால், அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக, நானும் மற்ற சில சீனியர் வக்கீல்களும் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியை ஓரிரு நாளில் சந்தித்துப் பேசுவோம். இவ்வாறு சாந்தி பூஷண் கூறினார்.
இதற்கிடையில், இந்திய பார் கவுன்சில் தலைவர் சூரஜ் நாராயண் பிரசாத் சின்கா வெளியிட்டுள்ள அறிக்கை: பாலி நாரிமனும் மற்ற சில சீனியர் வக்கீல்களும் எழுப்பிய பிரச்னை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நீதித்துறையின் கவுரவத்தை காப்பாற்ற இந்த விஷயத்தில் தலைமை நீதிபதியும், பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய சட்ட அமைச்சரும் விரைவாக செயல்பட வேண்டும். கர்நாடகாவில், "பெயில் அதாலத்' ஒன்றை நடத்திய தினகரன், ஒரு மணி நேரத்தில், 500க்கும் மேற்பட்டவர்களை விடுவித்துள்ளார். இவர்களில் பலர் கொடிய குற்றவாளிகள். மேலும், பின்னி காட்டன் மில் வழக்கிலும் அவர் மீது பெரிய அளவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
Thursday, 17 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment