Wednesday 9 November 2011

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வந்தது. இதில் ஜெயலலிதாவை தவிர சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் ஆஜராயினர். வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது. 

இவ்வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா நேரில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று தனி நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதன்படி ஜெயலலிதா அக்டோபர் 20ம் தேதி நேரில் ஆஜராகும்படி கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதை தொடர்ந்து கடந்த மாதம் 20, 21ம் தேதிகளில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பி.என்.மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில் விசாரணை நடந்தது. இதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் ஆஜராயினர். விசாரணை நடந்த இரு நாட்களில் மொத்தம் 1384 கேள்விகளில், 567 கேள்விகளுக்கு மட்டுமே ஜெயலலிதா பதில் அளித்தார். இதையடுத்து நவம்பர் 8ம் தேதிக்கு (இன்று) விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

‘முதல்வர் பதவி வகிப்பதால் பணிச்சுமை காரணமாக பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கோரி ஜெயலலிதா மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு வந்தால், ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை தொடர்ந்து, இன்றும் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் ஜெயலலிதா வந்தால் பாதுகாப்பு வழங்க மாநகர காவல் துறை ஏற்பாடு செய்திருந்தது.
ஆனால் காலை 10 மணி வரை ஜெயலலிதா வருவது தொடர்பாக எந்த தகவலும் தமிழக அரசின் சார்பில் கர்நாடக காவல் துறைக்கு தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்துக்கு ஜெயலலிதா வரவில்லை என்பதை துணை போலீஸ் கமிஷனர் ரமேஷ் உறுதிப்படுத்தினார். நீதிமன்றத்தில் ஆஜராக சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் தங்கள் வழக்கறிஞர்களுடன் வந்திருந்தனர்.
22ம் தேதி ஜெ. ஆஜர் சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின் போது, ஜெயலலிதா சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான வக்கீல் குமார் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதா 22ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதிக்க வேண்டும். தேவைப்பட்டால் 23ம் தேதியும் நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 22ம் தேதி ஜெயலலிதா ஆஜராக உத்தரவிட்டார்.