Thursday 15 September 2011

இலங்கை அனுராதபுரத்தில் முஸ்லிம் தர்கா இடிப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இலங்கை அனுராதபுரத்தில் முஸ்லிம் தர்கா இடிப்பு
இலங்கையின் அநுராதபுரத்தில் அமைந்திருந்த ஒரு முஸ்லீம் தர்காவை சில பொளத்த பிக்குகள் அடங்கிய குழு ஒன்று சில நாட்களுக்கு முன்னர்
 இடித்து தரைமட்டமாக்கியதாக சில ஊடகச் செய்திகள் கூறியுள்ளன.

இந்தச் சம்பவம் போலிசாரின் முன்னிலையிலேயே நடந்ததாகவும் அந்தச் செய்திகள் கூறின
இந்தத் தர்கா , பௌத்தர்கள் புனிதமான இடமாகக் கருதும் சிங்கள மன்னன் துட்டகெமுனுவின் அஸ்தி புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே அமைந்திருப்பதால் அது இடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து தமிழோசையிடம் பேசிய அனுராதபுரம் மொய்தீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் முன்னாள் செயலாளர் அப்துல் ரசாக் அவர்கள், இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்ததாகவும், பிக்குமார் அடங்கலாக சுமார் 60 பேர் கொண்ட குழு ஒன்று இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் கூறினார்.
அதேவேளை அந்த தர்கா தாக்கப்படுவதில் இருந்து பாதுகாக்க வந்த முஸ்லிம்களை பொலிஸார் தடுத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இப்படியான சம்பவம் ஒன்றும் அநுராதபுரத்தில் நடக்கவில்லை என்று இலங்கை பொலிஸ் தரப்பில் பேசவல்ல அதிகாரி மறுத்துள்ளார்.
இது குறித்து இணையத்தளங்களில் புகைப்படங்கள் வெளிவந்துள்ளமை குறித்துக் கேட்டதற்குப் பதிலளித்த அவர், அப்படி இலங்கையில் உள்ள எந்த ஊடகமும் தகவல் வெளியிடவில்லை என்றும், வெளிநாட்டு ஊடகங்களில் அப்படி எதுவும் வந்திருந்தால் அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்.