Wednesday, 24 August 2011

ஹசாரே போராட்டம் முடிவுக்கு வருகிறது!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.


இன்று 9-வது நாளாக அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. மிக விரைவில் அவர் சுயநினைவை இழக்கக் கூடும். ஏற்கனவே பழுதடைந்த அவரது சிறுநீரகம் மேலும் பாதிக்கப்படும். அவரது உடலில் சோடியம் மற்றும் குளுக்கோஸ் உடனடியாக சேர்க்காவிட்டால் இதய துடிப்பும் பாதிக்கப்படும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். அபாய கட்டத்தை அடைவதற்குள் உடனடியாக குளுக்கோஸ் ஏற்றி ஆஸ்பத்திரியில் அவரை சேர்க்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆனால், மருத்துவ சிகிச்சையை ஏற்க ஹசாரே மறுத்து வருகிறார். தன்னை வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றால், அதை தடுக்க வேண்டும் என மைதானத்தில் திரண்டுள்ள தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் மேற்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் டாக்டர்கள் திணறுகின்றனர். இன்று காலை அவரது உடல்நிலையை பரிசோதித்த டாக்டர் நரேஷ் கூறுகையில், ‘‘ஹசாரே உடல்நிலையை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஆய்வு செய்து வருகிறோம். உடனடியாக ஆஸ்பத்திரியில் சேரும்படி அவரிடம் தெரிவித்தோம். அவர் மறுத்து வருகிறார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது’’ என்றார்.

ஹசாரே உடல்நிலை மோசமாகி வருவதால் டெல்லியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. ஹசாரே தரப்பில் கெஜ்ரிவால், கிரண்பேடி, பிரசாந்த் பூஷண் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். ‘அரசு சார்பில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த லோக்பால் மசோதாவை திரும்ப பெற வேண்டும். ஹசாரே கொடுத்த மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியுடன் பிரதமர் மன்மோகன் சிங் அவசர ஆலோசனை நடத்தினார். அதன் அடிப்படையில் லோக்பால் மசோதாவில் பிரதமர் மற்றும் சிபிஐ, நீதிபதிகள், ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகியோரை சேர்க்க அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பேடி, பிரசாந்த் பூஷண் ஆகியோர் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். டெல்லி எம்.பி. சந்தீப் தீட்சித்தும் உடன் இருந்தார்.

முன்னதாக நிருபர்களிடம் பேசிய அமைச்சர் குர்ஷித், லோக்பால் மசோதா நிறைவேற்ற 20 நாட்களுக்கு மேல் ஆகலாம். அதுவரை உண்ணாவிரதம் இருந்தால், அன்னாவின் உடல்நலம் தாங்காது. இப்போது லோக்பாலைவிட அன்னாவின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவதுதான் முக்கியமானது என்றார்.

பேச்சுவார்த்தையில் ஓரளவு உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று மாலைக்குள் ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. மாலையில் நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசின் நிலை குறித்து தெரிவிக்கப்பட்டு, ஒருமனதாக முடிவு எடுக்கப்படுகிறது. அதன்பிறகு முக்கிய அறிவிப்பை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

0 comments: