Sunday 14 August 2011

சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லி ரயில்நிலையத்தில்
குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியுடன் நின்றிருந்த வாலிபர் பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் காஷ்மீர் தீவிரவாதிகளுடன் செல்போனில் பேசியது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது. சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் நோக்கில் டெல்லியில் ஊடுருவினாரா என்றும் விசாரணை நடக்கிறது.


நாடு முழுவதும் 64-வது சுதந்திர தின விழா நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகிறார். விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் இடம் பெறுகின்றன. சுதந்திர தின விழாக்களின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் தடுக்கும் வகையில், டெல்லியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

செங்கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளில் 40 விசேஷ கேமராக்கள் பொருத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. உயரமான கட்டிடங்களில் கமாண்டோக்கள் நிறுத்தப்படுகின்றனர். நாடாளுமன்ற வளாகம், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், ரயில், பஸ் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அணிவகுப்பு மற்றும் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு செங்கோட்டை பகுதியில் 7 மணி நேரத்துக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி ரயில் நிலையத்தில் துப்பாக்கியுடன் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரயில்வே துணை கமிஷனர் குஜ்ஜார் கூறியதாவது:

டெல்லி ரயில் நிலையம் அஜ்மீரி கேட் நுழைவாயில் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் திரிந்த வாலிபரை ரயில்வே அதிவிரைவுப்படை போலீசார் பிடித்துள்ளனர். அவரது உடைமைகளை சோதனையிட்டதில் குண்டுகள் நிரப்பப்பட்ட நாட்டுத் துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குண்டுகள் நிரப்பும் கார்டிரிஜ்கள், 3 செல்போன்களும் அவரிடம் கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்த செல்போன்களில் இருந்து காஷ்மீருக்கு பல முறை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அவருக்கு தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருக்குமா என்றும் நாச காரியம் செய்யும் நோக்கில் டெல்லிக்குள் ஊடுருவினாரா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு குஜ்ஜார் கூறினார்.

பிடிபட்ட வாலிபர் உத்தர பிரதேச மாநிலம் ஜலான் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (29) என தெரிகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதையடுத்து ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் 9 அதிவிரைவு படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகர்களில் பாதுகாப்பை கூடுதலாக்கும்படி மத்திய அரசு மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் லஷ்கர் இ தொய்பா, இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புகள் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் தாக்குதல் நடத்தலாம் என உளவு அமைப்புகள் ஏற்கனவே எச்சரித்துள்ளன. இதனால் ரயில்நிலையங்களில் மத்திய படை, ரயில்வே அதிவிரைவு படையுடன் 500 சிறப்பு அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு பயணியும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார். இதனால் டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. சோதனைக்கு வசதியாக பயணிகள் முன்னதாகவே ரயில்நிலையம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி முழுவதும் போலீசாருடன் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லி மெட்ரோ கார்ப்பரேஷன் பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணி முதல் நாளை பிற்பகல் 2 மணி வரை பொது இடங்களில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் பகுதிகளில் மர்மமான முறையில் அதிக நேரம் நிற்கும் வாகனங்களை போலீசார் கைப்பற்றி காவல்நிலையம் கொண்டு செல்கின்றனர். ரயில் நிலையங்களில் அதிக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நேற்று முதல் நாளை வரை பிளாட்பார்ம் டிக்கெட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் எல்லைப் பகுதிகள், கடலோர பகுதிகள், மாநில எல்லைகளில் பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

0 comments: