Thursday 4 August 2011

சட்ட சபையில் இன்று புதிய அரசின் பட்ஜட்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழக சட்டசபையில் நாளை நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் 2011 – 12 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை
த் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீதான விவாதம் ஒரு வார காலத்திற்கு நடைபெறும்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அ. தி. மு. க. அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. பல முக்கிய அறிவிப்புகளை மக்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்துள்ளனர்.

அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புத்துயிர் கொடுப்பது உள்ளிட்டவை குறித்து முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நில அபகரிப்பு தொடர்பாக புதிய சட்ட மசோதா கொண்டுவரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அ. தி. மு. க.வின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த இலவச கறவை மாடுகள், ஆடுகள் திட்டம், இலவச மடிக் கணனி திட்டம், இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறித் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், புதிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம். அதன் பின்னர் இந்தத் திட்டங்கள் முழு வீச்சில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இந்த கூட்டத் தொடர் புயலைக் கிளப்பும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நில மோசடி, நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் பெருமளவிலான தி. மு. க.வினர் கைதாகியுள்ளனர். தொடர்ந்து கைதாகி வருகின்றனர்.

இந்த விவகாரத்தை சட்ட சபையில் தி. மு. க. எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், சமச்சீர் கல்வித் திட்டப் பிரச்சினையும் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமச்சீர் கல்வித் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று அ. தி. மு. க. கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளும் வலியுறுத்தி வருவதால் அவர்களும் தி. மு. க.வுடன் இணைந்து குரல் கொடுக்கலாம்.

பட்ஜெட் மீதான விவாதம் ஒருவார காலம் நடைபெறும். அதன் பின்னர் வரும் சுதந்திர தினம் உள்ளிட்ட விடுமுறைகளுக்குப் பின்னர் மீண்டும் சபை கூடி விவாதத்தைத் தொடரும் என்று தெரிகிறது.

இதற்கிடையே தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு மொத்தமாக ஒரே இடத்தில் அமர இருக்கை ஒதுக்க வேண்டும் என்று தி. மு. க. விடுத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் தி. மு. க.வினர் அமர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: