Friday 19 August 2011

சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் 2வது நாளாக ரெய்டு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி
வருகின்றனர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாகவும், பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.சென்னை ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் துணிக் கடை உள்ளது. அதன் கிளைகளாக எதிரே பாத்திரக் கடை, மரச்சாமான்கள் கடை, எலக்ட்ரானிக் பொருட்கள் கடை உள்ளன.

ரங்கநாதன் தெருவுக்கு எதிரே உஸ்மான் சாலையில் சரவணா செல்வரத்தினம் ஸ்டோர், பனகல் பார்க் எதிரே சரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்டமாய் என்ற துணிக் கடை, அருகில் செல்வரத்தினம் ஜுவல்லர்ஸ், புரசைவாக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்டமாய் துணிக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்களின் வீடுகள், தனி அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் 500 பேர் நேற்று காலை 8 மணிக்கு ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையை முன்னிட்டு கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் யாரும் கடைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஊழியர்கள் மற்றும் மேனேஜர்களும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்த அதிகாரிகளின் சோதனை நேற்று இரவிலும் தொடர்ந்து நடந்தது. இன்று காலையிலும் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. துணிக் கடை மற்றும் நகைக் கடைகளில் பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இப்போது நடந்த சோதனையில் வரி ஏய்ப்புக்கான ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன. அதில் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதற்கு ஆதாரமாக கட்டுக் கட்டாக ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும். எவ்வளவு வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்பது குறித்து சோதனை முடிந்த பிறகு அறிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 comments: