Thursday 7 July 2011

சமச்சீர் கல்வி ராமதாஸ் அறிக்கை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து பரிந்துரை செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட 9 பேர் கொண்ட குழு, சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. உச்சநீதி மன்றத்தின் ஆணைப்படிதான் இந்தக் குழு அமைக்கப்பட்டது என்ற போதிலும், இதிலுள்ள உறுப்பினர்களை தேர்வு செய்தது தமிழக அரசுதான். எனவே தமிழக அரசு நினைத்ததை இக்குழு செய்து முடித்திருக்கிறது.

இந்தக் குழுவில் சமச்சீர் கல்விக்கு எதிரான தனியார் பள்ளிகளின் முதலாளிகளை உறுப்பினர்களாக நியமித்தபோதே, சமச்சீர் கல்வி முறைக்கு இக்குழு சமாதி கட்டிவிடும் என்று அச்சம் தெரிவித்திருந்தேன். அதன்படியே இப்போது நடந்திருக்கிறது.   சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதற்காக தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறிவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யவில்லை. மாறாக ஒன்றாம் வகுப்புக்கும், ஆறாம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த ஆணையிட உச்சநீதிமன்றம், மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளை தெரிவிக்கும்படிதான் 9 பேர் குழுவுக்கு அறிவுறுத்தியிருந்தது.

சமச்சீர் கல்விமுறை செல்லும் என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் ஏற்கனவே உறுதி செய்திருப்பதால், சமச்சீர் கல்வி முறையை மாற்றுவது குறித்து இக்குழு ஆராயக் கூடாது- மாறாக சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து மட்டுமே இக்குழு ஆராய வேண்டும்மு என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். 

ஆனால், தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவோ, உச்சநீதிமன்றம் சொன்ன பணிகளை செய்யாமல், சொல்லாத விசயங்களை செய்து விட்டு சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளையும், அறிக்கை களையும் ஆராய்ந்துதான் இந்த முடிவுக்கு வந்ததாக வல்லுநர் குழு அதன் அறிக்கையில் கூறியுள்ளது.

ஆனால், அக்குழு ஆராய்ந்ததாக கூறப்படும் அறிக்கைகளின் பட்டியலில், சமச்சீர் கல்வி தொடர்பான முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தாக்கல் செய்த அறிக்கை இடம் பெறவில்லை. சமச்சீர் கல்வி முறைக்கு அடிப்படையான முத்துக்குமரன் குழுவின் அறிக்கையையே படிக்காமல் வல்லுநர் குழு எப்படி இந்த முடிவுக்கு வந்தது என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

வல்லுநர் குழு அறிக்கையை படிக்கும்போது ஒரு விசயம் தெளிவாக புரிகிறது. சமச்சீர் கல்வி வரக்கூடாது என்று தமிழக அரசு காலால் இட்ட பணியை வல்லுநர் குழு தலையால் செய்து முடித்திருக்கிறது. 

வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்கு எதிராகவே இருப்பதால், அவற்றை சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே பல்வேறு தரப்பினரும் தாக்கல் செய் துள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின்படி சமச்சீர் கல்வி வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என்று நம்புகிறேன்.

1 comments:

said...

அவரு ஒரு ஆளு அவரு ஓடுறது ஒரு அறிக்கை விடுங்க பாஸ் ..



வலைசரத்தில் இன்று ...
கண்ணை நம்பாதே