Monday 4 July 2011

தமிழர்களை கலைஞர் கைவிட்டுவிட்டாரென்ற கருத்தை மூலதனமாக்கும் ஜெயலலிதா'

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
jayalithaதமிழர்களின் காவலரென தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க.தலைவருமான மு.கருணாநிதி சுயமாக வரித்துக்கொண்ட அடையாளமானது தமிழுக்காகப் போராட்டத்தை நடத்துகின்றவர்கள் மத்தியில் நீண்டகால அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை தோன்றியுள்ளது.
அவர் சொல்லில் மட்டுமே தமிழை நேசிக்கிறார். செயலில் அல்ல என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. அத்துடன், தமிழர்களின் நோக்கத்திற்கு அவர் துரோமிழைத்துவிட்டதாகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இலங்கையால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக நான் வருவதற்கு அனுமதியுங்கள் அவ்வாறு இடம்பெற்றால் சகல தமிழர்களுக்காகவும் நான் செய்த தியாகமாக அமையுமென்று முதலமைச்சராக இருந்த வேளையில் கருணாநிதி கூறியிருந்தார். ஆனால், அவர் மேற்கொண்ட ஏனைய செயற்பாடுகள் அவரை ஒரு சந்தர்ப்பவாதி என்ற கருத்தையும் தமிழர்களின் நோக்கத்தை விற்பனை செய்து அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்றார் என்ற விசனங்களையும் அச்சமயம் ஏற்படுத்தியிருந்தன.
ஆனால், அவர் தனது முதலமைச்சர் பதவியுடன் தமிழர்களின் காவலர் என்ற தனது அடையாளச் சின்னத்தையும் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்துள்ளார். கடந்த மாதம் இலங்கைக் கெதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டுமென தமிழக சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றியதையடுத்து தமிழர்களின் காவலர் என்ற பட்டம் ஜெயலலிதாவின் கரங்களுக்கு சென்றுள்ளது.
திரைப்பட இயக்குநர் சீமான் கருணாநிதியின் அரசாங்கத்தினால் பல தடவைகள் கைது செய்யப்பட்டிருந்தார். தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. அவர் ஜெயலலிதா இப்போது காவல் தெய்வமென அழைத்ததாக நம்பப்படுகிறது. அதேசமயம், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் புலிகளுக்காகக் குரல் கொடுத்து வருபவராவார். அத்துடன் உலகளாவிய ரீதியிலுள்ள தமிழ் இயக்கங்களுக்கும் ஆதரவாகக் குரல் கொடுப்பவர். அவரும் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைமையிலான எம்.பி.க்கள் தூதுக்குழு இலங்கைக்கு யுத்தத்தின் பின்னர் சென்றிருந்த போது, திருமாவளவனும் அதில் இடம்பெற்றிருந்தார். ஆனால், தேர்தலில் அவர் தனது தொகுதியில் தோற்றமையையிட்டு கருணாநிதி மீது கோபம் கொள்வதற்கு அவரிடம் காரணம் உள்ளது.
ஜெயலலிதாவின் அணுகுமுறையில் சில மாற்றங்கள் உள்ளன. தீர்மானமானது உறுதிப்பாட்டுடன் உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகளின் முன்னாள் எம்.எல்.ஏ.எம். தமிழ் எழுத்தாளருமான டி.ரவிகுமார் கூறியுள்ளார். ஆனால், இந்தத் தீர்மானமானது வெறுமனே அடையாளத்துவத்திற்கான பெறுமானமாக மட்டுமே இருப்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஏனெனில், வெளிநாட்டுக் கொள்கையை மாநில அரசாங்கங்கள் மேற்கொள்ள முடியாதென்று அவர் கூறியுள்ளார். தமிழக அரசாங்கம் நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பாக மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பதே முக்கியமானதாகும் என்று அவர் கூறுகிறார். இலங்கை செய்ததை பல நாடுகள் கண்டித்துள்ளன. ஆனால், இந்தியா அவ்வாறு செய்யவில்லை. மத்திய அரசிடம் மாற்றம் ஏற்படவில்லை. அங்கு மாற்றம் ஏற்படாத வரை எதனையும் செய்ய முடியாது என்று ரவிகுமார் கூறியுள்ளார்.
1979 இல் தமிழ்த் தேசிய இயக்கத்தை ஸ்தாபித்த பழ.நெடுமாறன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழர்களின் பாதுகாவலர் என்று தன்னைத்தான் அழைப்பதற்கு கருணாநிதிக்கு எந்த உரிமையும் கிடையாது. அரசாங்கத்தில் தமிழ் இப்போதும் உத்தியோகபூர்வமொழியாக இல்லை. ஆறு தடவைகள் அவர் முதலமைச்சராக இருந்தார். தமிழுக்காக அவர் என்ன செய்திருந்தார். கடந்த வருடம் மே மாதம் கோயம்புத்தூரில் உலகத் தமிழ் செம்மொழிமாநாட்டை நடத்தியிருந்தார். தமிழ் மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே அவர் இதனை நடத்தினார். இலங்கையில் அவர் ஒன்றும் செய்யாது இருப்பதனால் ஆத்திரமேற்பட்டிருப்பதை அவர் தெரிந்துகொண்டிருந்தார். ஜெயலலிதா தமிழக சட்டசபையில் தீர்மானத்தை ஏக மனதாக நிறைவேற்றியுள்ளார். அதன் பின்னர் பிரதமரைச் சந்தித்து அந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். பந்து இப்போது மத்திய அரசிடம் உள்ளது. நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்று நெடுமாறன் கூறுகிறார்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் இப்போது கருணாநிதியுடன் நல்லெண்ணம் கொண்டவர்களாக இருக்கவில்லை. ஜெயலலிதாவைப் பாராட்டுகின்றனர். ஜெயலலிதா இந்தக் கடுமையான தீர்மானத்தை ஆரம்பித்திருப்பதானது எமது உள வலுவை மேலோங்கச் செய்துள்ளது. நாங்கள் ஜெயலலிதாவைச் சந்தித்து நன்றி சொல்லப் போகிறோம் என்று லண்டனைத் தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவையின் சாள்ஸ் அன்டனிதாஸ் கூறியுள்ளார். நன்றியுணர்வுடன் சிரந்தாழ்த்துகிறாம் என்று அவுஸ்திரேலிய தமிழ்ச் சங்கங்கள் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளன. தமிழ்க் குழுக்கள் பல ஜெயலலிதாவைப் புகழ்ந்துகொண்டிருக்கின்றன. இராமேஸ்வரத்தில் பாரிய பேரணியை ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நடத்தப்போவதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். பெரியார் தி.கவும் மனித நேய மக்கள் கட்சியும் தமிழர்களின் இரட்சகர் என்ற பட்டத்தை ஜெயலலிதாவுக்கு வழங்குவதில் ஆர்வமாக உள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன. இதுவரை காலமும் அவரின் நிர்வாகம் மற்றும் துணிச்சலான தீர்மானங்களுக்கு பாராட்டுகள் வழங்கப்பட்டனவே தவிர, தமிழர்களின் நோக்கத்திற்கான வெற்றியாளராக அவர் பாராட்டப்பட்டிருக்கவில்லை. தமிழக சட்டசபையில் இப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்துகொண்டிருந்த போதிலும் சிலர் அதற்கு எதிராக கருத்துகளையும் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதியிலும் பார்க்க மேலெழுந்து வர அவர் விரும்புகிறார். அவரின் சர்வாதிகார வழிமுறைக்கு சென்றுகொண்டிருப்பதால் ஏற்படும் விளைவுகள் அச்சமானவை என்று மற்றொருவர் கூறுகிறார். தமிழர்களின் பிரச்சினையானது சகல அரசியல் கட்சிகளுக்கும் பொதுவான விடயமாகும். இடது மற்றும் தமிழ்த் தேசியவாதிகள் பலரினால் கருணாநிதி உரிமை கோரும் விடயங்கள் சவால்களுக்கு உட்படுத்தப்பட்டன. தமிழர்களின் தலைவர் என தன்னைத்தானே பிரகடனப்படுத்தியிலிருந்து வெளியேறுவதற்கு அவர் ஒருபோதும் எவருக்கும் இடமளித்ததில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க. எம்.பி.க்கள் பதவி விலகியதை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வேண்டுமென்றே மறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழர்களின் புதிய பாதுகாவலராக உண்மையில் ஜெயலலிதா உருவாகியுள்ளாரா? அல்லது கருணாநிதியுடன் தமிழர்கள் ஆத்திரத்துடன் இருக்கிறார்கள் என்பதற்காக மட்டும் தான் அவர் அந்தப் புதிய அடையாளத்தைப் பெற்றிருக்கின்றாரா? தமிழர்களை கருணாநிதி கைவிட்டுவிட்டார் என்ற கருதுகோளை ஜெயலலிதா மூலதனமாக்கிக்கொண்டிருக்கின்றார் என்று வெங்கடாசலபதி என்பவர் கூறுகிறார் என்று அவுட் லுக் பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது.

0 comments: