Monday 23 May 2011

அமைச்சர் மரியம் பிச்சையின் மரணத்தில் மர்மம்: உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் ஜெயலலிதா பரபரப்பு தகவல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சர் மரியம் பிச்சையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஜெயலலிதா,
மரியம் பிச்சையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டார். மேலும் இது குறித்து சிபிசிஐடி பொலிஸார் விசாரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில் இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவால் அதிமுகவினர் சோகமடைந்துள்ளனர்.
மரியம் பிச்சையின் உடல் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சங்கிலியாண்டபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அவரது மரியம் தியேட்டரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மரியம் பிச்சையின் மறைவு குறித்து முதல்வர் ஜெயலலிதா அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்திருந்தார்.
இன்று பிற்பகலில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயலலிதா, அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தனி விமானம் மூலம் திருச்சி விரைந்தார். மரியம் பிச்சையின் உடலுக்கு அவர் இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் மரியம் பிச்சையின் மனைவி, பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அங்கு கூடியிருந்த பெரும் திரளான அதிமுகவினர், மரியம் பிச்சையின் மரணத்தில் மர்மம் நிலவவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது காரில் ஏறப்போன ஜெயலலிதா, அதை நிறுத்தி விட்டு செய்தியாளர்களை அழைத்துப் பேசினார். அவர்களிடம் அவர் கூறுகையில், அமைச்சர் சாவில் மர்மம் இருக்கிறது. விபத்து குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பொதுமக்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே மரியம் பிச்சை மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார். ஜெயலலிதா இப்படிக் கூறியிருப்பதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. மரியம் பிச்சையின் மரணம் குறித்து தீவிர பொலிஸ் விசாரணை நடைபெறப் போவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மரியம் பிச்சையின் கார் ஓட்டுனர் ஆனந்தனைப் பிடித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கோர விபத்தில் அமைச்சர் மட்டுமே பலியாகியுள்ளார். அவரது உடல் நசுங்கிப் போய் விட்டது. ஆனால் ஓட்டுனர் ஆனந்தன் ஒரு காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளார். ஆனந்தன் சென்னை முகப்பேரைச் சேர்ந்தவராவார். அவரிடம் பொலிஸார் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

0 comments: