Tuesday, 28 December 2010

புத்தாண்டு கொண்டாட்டம் போலீஸ் அதிரடி நடவடிக்கை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னையில் 2011 புத்தாண்டு கொண்டாட்டம் நட்சத்திர ஓட்டல்களில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. மது விருந்து, நடன நிகழ்ச்சி, ஆட்டம் பாட்டம் என அமர்க்களமாக கொண்டாடப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து நடன அழகிகளை அழைத்து வருகிறார்கள்.
2007-ம் ஆண்டு தனியார் ஓட்டல் ஒன்றில் நீச்சல் குளத்தின் மீது மேடை அமைத்து நடன நிகழ்ச்சி நடத்தினார்கள். அப்போது மேடை சரிந்து நீரில் மூழ்கியதால் உயிர்ப்பலி ஏற்பட்டது.
இதையடுத்து இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நட்சத்திர ஓட்டல்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர்.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்தது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள் 45 பேர், கேளிக்கை விடுதி, கிளப்புகளின் உரிமை யாளர்கள், நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர், தென்சென்னை இணை கமிஷனர் சக்தி வேல், துணை கமிஷனர்கள் சாரங்கன், பெரியய்யா, லட்சுமி, சண்முகவேல் உள்பட போலீஸ் அதிகாரி களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-
* போக்குவரத்துக்கு இடையூறு இன்றி புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வருபவர்களது வாகனங்களை நிறுத்த இட வசதி செய்து தரவேண்டும்.
* புத்தாண்டு கொண்டாட வரும் பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
* இட வசதிக்கேற்ப மட்டுமே ஆட்களை அனுமதிக்க வேண்டும்.
* ஓட்டல்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டும்.
இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புத்தாண்டு பாதுகாப்பு தொடர்பாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள் 100 பேர் கலந்து கொண்டனர். பாதுகாப்பான முறையில் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்று அவர் களிடம் அறிவுறுத்தி உள்ளோம்.
ஓட்டலுக்குள் மேடை அமைத்தால் அந்தந்த பகுதி துணை கமிஷனர்களிடம் அனுமதி பெற வேண்டும். ஓட்டல் வளாகத்தில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. யாராவது பெண்களை கிண்டல் செய்தால் அவர்கள் பற்றி போலீசாரிடம்தான் தெரிவிக்க வேண்டும். ஓட்டல் ஊழியர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது.
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கடற்கரை சாலையில் வாகனங்களை வேகமாக ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக கடற்கரை சாலை முழுவதும் தடுப்பு வேலிகள் அமைக்கப்படும்.
* 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
* நள்ளிரவு 1 1/2 மணியுடன் நட்சத்திர ஓட்டல்களை மூட வேண்டும்.
* ஓட்டல்களில் ஆபாச நடனம் ஆடக்கூடாது.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆபாச நடனம் ஆடிய 8 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் கமிஷனர்கள் சஞ்சய் அரோரா, ஷகில் அக்தர், இணை கமிஷனர் சக்திவேல், துணை கமிஷனர் ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட சவேரா ஓட்டல் நிர்வாக மேலாளர் ரத்தீஷ் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாதுகாப்பான முறையில் புத்தாண்டை கொண்டாடுவது எப்படி என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் விவா திக்கப்பட்டது. புத்தாண்டு அன்று நள்ளிரவு 1 1/2 மணிக்குள் ஓட்டல்களை மூட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். நீச்சல் குளம் இருக்கும் இடம் அருகில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளனர்.
இத்தகைய கட்டுப்பாடுகள் பாதுகாப்பானது என்பதால் அதை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு வருபவர்களை, வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளனர். இதற்காக எங்கள் ஓட்டலில் 15 டிரைவர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.
கார்களை ஓட்ட முடியாத அளவுக்கு குடித்துவிட்டு வருபவர்களை எங்கள் டிரைவர்கள் அவர்களது வீடுகளில் கொண்டு போய் விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: