Wednesday 27 October 2010

காங்கிரஸில் சேரப் போவதாக கூறிய ராதாரவி அதிமுகவில் இணைந்தார்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
காங்கிரஸில் சேரப் போவதாக கோட்டிக் காட்டிய நடிகர் ராதாரவி, திடீரென
 நேற்று அதிமுகவில் சேர்ந்து விட்டார். இவர் அதிமுகவில் சேருவது இது 2வது முறையாகும்.

அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு நேற்று ராதாரவி சரியான உதாரணமாக இருந்தார். சில நாட்களுக்கு முன்பு அவர் ராகுல் காந்தியை டெல்லி சென்று சந்தித்துப் பேசினார்.

அதுகுறித்து அவர்கூறுகையில், இளம் தலைவர் ராகுல் காந்தி சிறப்பான ஒரு தலைவர். அவரிடம் நடந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது. காங்கிரஸில் சேருவதற்கு விருப்பம் இருந்தால் இமெயில் மூலம் தகவல் அனுப்புமாறு கூறியிருந்தார். அதுகுறித்து ஒரு வாரத்திற்குள் முடிவெடுப்பேன் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து ராதாரவி காங்கிரஸில் சேரப் போவதாக பேச்சு எழுந்தது. அதோடு மட்டுமல்லாமல், ராதாரவி தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த குட்டி நடிகர்கள் பலரும் காங்கிரஸுக்கு வருவார்கள் என்றும் கூறப்பட்டது.

ஆனால் நேற்று திடீரென யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதாவை போய்ச் சந்தித்து அதிமுகவில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டார் ராதாரவி.

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில்,

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று பிற்பகல் சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடிகர் ராதாரவி நேரில் சந்தித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொண்டார் என்று கூறப்பட்டிருந்தது.

ராதாரவி ஆரம்பத்தில் திமுகவில் தீவிரமாக செயல்பட்டார். அங்கு பதவி ஏதும் தரப்படவில்லை என்று அதிருப்தி அடைந்து அதிலிருந்து வெளியேறினார். இடையில் சில காலம் மதிமுகவுக்கு ஆதரவாக இருந்தார். பின்னர் அவரும், எஸ்.எஸ்.சந்திரனும் அதிமுகவில் இணைந்தனர்.

ராதாரவியை சைதாப்பேட்டை எம்.எல்.ஏவாக்கினார் ஜெயலலிதா. எஸ்.எஸ்.சந்திரன் எம்.பியாக இருந்தார். சமீபத்தில் அவர் மரணமடைந்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார் ராதாரவி.

காங்கிரஸில் சேருவது குறித்துப் பரிசீலிப்பேன் என்று அவர் கூறியிருந்த நிலையில் அவசரம் அவசரமாக அதிமுகவில் சேரும் அளவுக்கு இடையில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை

0 comments: