Wednesday 11 August 2010

விளம்பர அழைப்புகளில் இருந்து தப்பிக்க புதிய திட்டம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நேரம்காலம் தெரியாமல் வரும் விளம்பர தொலைபேசி அழைப்புகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தப்பிக்க புதிய திட்டம்
ஒன்றை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் அறிமுகப் படுத்தப் போகிறது.

நாம் முக்கியமானப் பணி எதையாவது செய்து கொண்டிருப்போம். திடீரென நம் செல்போன் அலறும். எடுத்து ‘ஹலோ’ என அலுப்புடன் சொன்னால், நமக்கு வீடு கட்ட கடன் வேண்டுமா என்று கேட்பார்கள் அல்லது கடன் அட்டை வேண்டுமா என்று கேட்பார்கள். இது நம் வாழ்வில் அடிக்கடி நிகழும் ஓர் நிகழ்வாகிவிட்டது.
இதைப் போன்ற தொந்தரவு செய்யும் விளம்பர அழைப்புகளில் இருந்து விடுபட Do Not Disturb என்ற திட்டத்தை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) அறிமுகப் படுத்தியது. அதாவது, Do Not Disturb என்ற பட்டியலில் நம் அலைபேசி எண்ணை பதிவு செய்து கொண்டு விட்டால், நமது எண்ணுக்கு விளம்பர அழைப்புகள் வராது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த இந்த நிம்மதியும் நீண்ட நாளைக்கு நிலைக்கவில்லை. DND பட்டியலை சட்டை செய்யாமல், அதில் பதிவு செய்து வைத்திருக்கும் எண்களுக்கு கூட விளம்பர அழைப்புகள் வர ஆரம்பித்து விட்டன.

நமக்குதான் இந்த உபத்திரவம் என்றால் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இந்த தொல்லையில் இருந்து விடுபடவில்லை. கடந்த திங்கள் கிழமை எதிர்கட்சி தலைவர்களுடன் முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் பிரணாப் முகர்ஜி. அப்போது பிரணாப் முகர்ஜியின் செல்போன் அதிர்ந்தது. எடுத்து பேசிய முகர்ஜியிடம் ‘உங்களுக்கு லோன் ஏதாவது தேவை படுதா?’ எனக் கேட்டுள்ளனர். ’அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.’ என கடிந்து கொண்டு அழைப்பை துண்டித்தார் பிரணாப் முகர்ஜி. இதைப் பார்த்துக் கொண்டு இருந்த தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா உடனடியாக செயலில் இறங்கினார்.

ஆ.ராசாவின் அறிவுறுத்தலின் படி, ட்ராய் விரைவில் பல நிபந்தனைகளை விதிக்கப் போகிறதாம். பல சந்தாதாரர்களுக்கு ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் அனுப்பப் படும் குறுஞ்செய்திகளுக்கு (Bulk SMS) தடை விதிக்கப் படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும், விளம்பர அழைப்புகளை தடை செய்ய முடியாத பட்சத்தில், வருவது விளம்பர அழைப்புதான் என வாடிக்கையாளர்கள் சுதாரித்துக் கொள்ள தோதாக, ஏதாவது குறியீடு ஒன்று அலைபேசி திரையில் வருவது போல செய்யுங்கள் என ட்ராய், தொலைதொடர்பு நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

0 comments: